மாநில உரிமைகளுக்காக போராடியதில் தமிழகத்திற்கு பெரும் பங்கு உண்டு

மாநில உரிமைகளுக்காக போராடியதில் தமிழகத்திற்கு பெரும்பங்கு உண்டு என்று அரசியல் அமைப்பு தின விழாவில் தேசிய சட்டப்பள்ளி துணைவேந்தர் பேசினார்.
மாநில உரிமைகளுக்காக போராடியதில் தமிழகத்திற்கு பெரும் பங்கு உண்டு
Published on

திருச்சி,

திருச்சி ஜோசப் கல்லூரியில் நேற்று அரசியல் அமைப்பு தினம் மற்றும் சமூக நல்லிணக்க வார நிறைவு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஆண்ட்ரூஸ் தலைமை தாங்கினார். தமிழ் துறை தலைவர் செல்வகுமாரன் வரவேற்று பேசினார்.

இந்த விழாவில் திருச்சியில் உள்ள தேசிய சட்டப்பள்ளியின் துணைவேந்தர் கமலா சங்கரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நமது நாட்டின் அரசியல் சட்ட புத்தகத்தை எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டும். இளைஞர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கூட பார்க்கலாம். அமெரிக்க நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் 1787-ம்ஆண்டு அமைக்கப்பட்ட பழம்பெருமை வாய்ந்தது என்றாலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தான் உலகிலேயே மிகவும் பெரியது மற்றும் நீளமானதும் ஆகும். நமது அரசியல் சட்டத்தில் 395 தொகுப்புகள் உள்ளன. அரசியல் சட்டம் அமைக்கப்பட்டு 50, 60 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் எத்தனையோ திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

அமெரிக்க நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு என தனியாக ஒன்று கிடையாது. அந்தந்த மாகாணங்களில் உள்ள தலைமை நீதிமன்றங்களே தங்களது இறுதி தீர்ப்பினை வழங்க முடியும். ஆனால் இந்தியாவில் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பு இறுதியானது அல்ல. மாநிலங்கள் பிரிந்து சென்று விடக்கூடாது என்பதற்காக தான் அரசியல் சட்டத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

நமது அரசியல் சட்டம் தனி சுதந்திரம் கொண்டது. அது ஒரு வளரக்கூடிய மரத்தை போன்றது. வளரும் மரத்தில் இலைகள் உதிரலாம். ஆனால் கிளைகள் பெருகிக்கொண்டே தான் இருக்கும். அதைப்போல் தான் நமது அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டாலும் அதன் அடிப்படை மாறாது.

பாராளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது அல்ல. அரசியல் சட்டத்திற்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அதனை நிராகரிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பெற்று உள்ளது. இதற்கு உதாரணமாக ஆதார் உள்பட பல வழக்குகளை கூற முடியும். நமது அரசியல் சட்டத்தில் தனிமனிதனின் உரிமைகள், மாநில அரசுகளுக்கான உரிமைகள், மத்திய அரசுக்கான உரிமைகள் பற்றி எல்லாம் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. மாநில உரிமைகளுக்காக போராடியதில் தமிழகத்திற்கு பெரும்பங்கு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com