விசுவாசத்தின் உருவம் கட்டப்பா.. துரோகத்தின் உருவம் எடப்பாடி பழனிசாமி: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

வாட்ஸ்-அப் வதந்திகளை எடப்பாடி பழனிசாமி வாந்தியெடுத்து வருகிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
விசுவாசத்தின் உருவம் கட்டப்பா.. துரோகத்தின் உருவம் எடப்பாடி பழனிசாமி: மு.க.ஸ்டாலின் விமர்சனம்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சாத்தூர் வேட்பாளர் கடற்கரை ராஜ், ராஜபாளையம் வேட்பாளர் செள.தங்கபாண்டியன், சிவகாசி வேட்பாளர் கணேசன் அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் மகாலிங்கம், திருச்சுழி வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டை வேட்பாளர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் விருதுநகர் வேட்பாளர் விஜயபிரபாகரன் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஈரோடு என்றால் தந்தை பெரியார், காஞ்சி என்றால் பேரறிஞர் அண்ணா, திருவாரூர் என்றால் தலைவர் கலைஞர் என்பதைப்போல், விருதுநகர் என்றால் பெருந்தலைவர் காமராஜர், அவருடைய மண் இது. சிவகாசி பட்டாசு என்றாலும் விருதுநகர்தான், சாத்தூர் என்றாலும் விருதுநகர்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்றாலும் விருதுநகர் தீப்பெட்டியாக இருந்தாலும் விருதுநகர்தான், பரோட்டாவாக இருந்தாலும் விருதுநகர்தான், காலண்டராக இருந்தாலும் விருதுநகர்தான்.

அருப்புக்கோட்டை தொகுதியின் வெல்லும் வேட்பாளர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர். அன்று முதல் இன்று வரை சுறுசுறுப்பாக மக்கள் பணியாற்றுகிறவர். திராவிட மாடலில் 21 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியிருப்பதில் பெரும் பங்கு வகித்த அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

திருச்சுழி தொகுதியின் வெல்லும் வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைவர் கலைஞரின் அன்புத்தூணாக இருந்தவர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக வென்றதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்திய நம் நிதித்துறையை தலைநிமிர வைத்தவர். இவரை எதிர்த்து நிற்கவே, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் விரும்பவில்லை என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. அப்படிப்பட்ட தங்கம் தென்னரசுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம்.

விருதுநகர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் விஜயபிரபாகரன், தே.மு.தி.க.வைச் சேர்ந்தவர். என் ஆருயிர் நண்பர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் சகோதரி பிரேமலதா விஜயகாந்தின் அன்பு மகனும், தே.மு.தி.க.வின் இளைஞர் அணிச் செயலாளருமான விஜயபிரபாகரனுக்கு ‘முரசு’ சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

மக்கள் ஆணையிட்டால் என்ற படத்தில் விஜயகாந்த் தேர்தலில் நிற்பதுபோல் காட்சி அமைந்திருக்கும்; அந்த படத்தில் அவருக்காக வாக்கு கேட்டு நானும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன். ஒரு திரைப்படத்தில் வேட்பாளராக நின்ற விஜயகாந்தை ஆதரித்து வாக்குச் சேகரித்த நான், தற்போது அவரின் மகன் விஜய பிரபாகரனுக்கு நேரடியாக வாக்குக் கேட்க வந்துள்ளேன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் வெல்லும் வேட்பாளர் மகாலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். திருவில்லிபுத்தூர் மக்களுக்காக தொடர்ந்து போராடும் தோழர் மகாலிங்கம் அவர்களுக்கு, கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிப்போம்.

ராஜபாளையம் தொகுதியின் வெல்லும் வேட்பாளர் செள.தங்கபாண்டியன், இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டவர். அவருக்கு அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, வெற்றிபெற செய்ய வேண்டும்.

சாதனைகளை எதையும் சொல்லமுடியாமல் அவதூறுகளையும், தரம்தாழ்ந்த பேச்சுக்களையும் நம்பி பரப்புரை செய்துகொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமி என்றாலே பொய், பித்தலாட்டம்தான். அரசு ஊழியர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்காது.

சங்கிக் கூட்டணியில் சேர்ந்ததற்கு பிறகு, அவர்களைப் போலவே வாட்ஸ்-அப் வதந்திகளை வாந்தியெடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமி சொல்லியிருக்கிற பொய்களை வைத்து ஒரு புத்தகமே போடலாம். அத்தனை பொய்களைச் சொல்லி வருகிறார். தலைவர் கலைஞரைப் பற்றி பச்சைப் பொய் சொன்ன அவர், தன் பொய்யிலிருந்து தப்பிக்க அடுத்தடுத்து பொய் சொல்லி வருகிறார்.

மக்களின் நீண்டநாள் கோரிக்கையான திருச்சுழியில் அரசுக் கல்லூரி கட்டும் பணி தொடங்கிவிட்டது. இனி எந்த திட்டம் வேண்டுமானாலும் மக்கள் கேட்கலாம், விருதுநகர் மக்களுக்காக அதனை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பியூஸ்போன சாமியாகி விட்டார். பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்து ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துள்ளார். பாகுபலி படத்தில் சத்யராஜை பார்த்து, விசுவாசத்திற்கு ஒரு உருவம் இருந்தால் அது நீதான் கட்டப்பா என்று சொல்கிற மாதிரி ஒரு டயலாக் வரும்; அதைபோல துரோகத்திற்கு உருவம் கொடுத்தால் அது எடப்பாடி பழனிசாமிதான்.

எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை நம்மால் எண்ண முடியாது. ஆனால், அவரின் தோல்வியை எண்ணிடலாம். ஏற்கனவே 10, அடுத்தது 11". 'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்' திமுகவின் சூப்பர் ஸ்டாரான தேர்தல் அறிக்கையை நாம் களத்தில் இறக்கியுள்ளோம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com