கமகமக்கும் காராமணிக்காய் பொரியல்

சுவையான காராமணிக்காய் பொரியலின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
கமகமக்கும் காராமணிக்காய் பொரியல்
Published on

                                                                                மகமக்கும் காராமணிக்காய் பொரியல்                    

தேவையான பொருட்கள்:

காராமணிக்காய் - 400 கிராம்

சாம்பார் வெங்காயம் - 200 கிராம்

கடுகு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - தேக்கரண்டி

சில்லி பிளேக்ஸ் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

காராமணிக்காயை நன்றாக சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும், பின்னர் அவற்றை அடி கனமான பாத்திரத்தில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை, பொடிதாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்பு அதில் மஞ்சள் தூள், சில்லி பிளேக்ஸ் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.

பிறகு அதில், வதக்கிய காராமணியை மசாலாவுடன் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கிளறவும். இப்பொழுது சுவையான 'காராமணிக்காய் பொரியல்' தயார். இதனை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.

காராமணியின் நன்மைகள்

காராமணியில், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள் ளது. இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி3, பி5, பி6, சி, போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சருமத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு காரணமான கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும். செல்கள் மற்றும் திசுக்களின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

காராமணியில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள், பசி உணர்வை கட்டுப்படுத்தக்கூடியவை. வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் தன்மையும் கொண்டவை.

காராமணியில் உள்ள பிளேவனாய்டுகள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள், இதயத் தசைகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தி அழற்சியை குறைக்கும். டிரைகிளிசரைடுகள் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

இதில் இருக்கும் போலேட் (வைட்டமின் பி9) ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை சீரான அளவில் பராமரிக்க உதவும். கருத்தரிக்கத் திட்டமிடும் பெண்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த வைட்டமின் முக்கியமானது. கருவில் உள்ள குழந்தைக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளைத் தடுப்பதில் 'போலேட்' முக்கிய பங்கு வகிக்கிறது.

உணவில் அவ்வப்போது காராமணியை சேர்த்து வந்தால், மயிர்க்கால்கள் வலுவாகி முடி உதிர்வது குறையும். இதில் உள்ள புரதம், முடி வளர்ச்சியைத் தூண்டி அடர்த்தியை அதிகரிக்கும்.

காராமணியில் உள்ள புரதம், துத்தநாகம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற சத்துக்கள் 'கொலாஜென்' உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் புதிய செல்கள் உற்பத்தியாகி சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும். இதில் ஆன்டி-ஆக்சிடன்டுகள் அதிக அளவில் இருப்பதால், பிரீரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தில் இருந்து சரும செல்களை பாதுகாக்கும். இதன் மூலம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் போன்ற முதுமையின் அறிகுறிகளை தாமதப்படுத்த முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com