ஒரு புகைப்படம் போதும்... உயிரிழப்பு அபாயத்தைக் கணிக்கும் புதிய ஏ.ஐ

ஒரு புகைப்படத்தின் மூலம் ஒருவரின் உயிரியல் வயதைக் கணிப்பதுடன், புற்றுநோயாளிகளின் உயிரிழப்பு அபாயத்தையும் மதிப்பிடும் புதிய செயற்கை நுண்ணறிவை உருவாக்கியுள்ளனர்.
ஒரு புகைப்படம் போதும்... உயிரிழப்பு அபாயத்தைக் கணிக்கும் புதிய ஏ.ஐ
Published on: 

ஒரு புகைப்படத்தை ஆய்வு செய்து, ஒருவரின் உயிரியல் வயதைக் கணிப்பதுடன், புற்றுநோயாளிகளுக்கு உயிரிழப்பு அபாயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் மதிப்பிடுகிறது. எதிர்காலத்தில், நோயாளிகளுக்கு ஏற்ற சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க மருத்துவர்களுக்கு இது உதவக்கூடும்.

4 கோடிக்கும் அதிகமான புகைப்படங்கள்

அமெரிக்காவின் மாஸ் ஜெனரல் பிரிகாம் மருத்துவ ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 4 கோடிக்கும் அதிகமான முகப்புகைப்படங்களைப் பயன்படுத்தி எப்.ஏ.எச்.ஆர்.-பேஸ் (FAHR-Face) என்ற ஏ.ஐ. மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், முகத்தைப் பார்த்து உயிரியல் வயதைக் கணிக்கவும், புற்றுநோயாளிகளின் உயிரிழப்பு அபாயத்தை மதிப்பிடவும் இரண்டு தனித்தனி கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

53 சதவீதம் பேர் 90 நாட்களில் உயிரிழப்பு

ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும் வயதுக்கும், உடலின் முதிர்ச்சியைப் பிரதிபலிக்கும் உயிரியல் வயதுக்கும் வேறுபாடு இருக்கும். இந்த வேறுபாட்டை முகத்தின் அம்சங்களைக் கொண்டு கணிக்கிறது ஏ.ஐ. இதற்காக, அமெரிக்காவில் கதிர்வீச்சு சிகிச்சை பெற்ற 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இந்த ஏ.ஐ. மாதிரியின் கணிப்புகள் மிகச்சரியாக இருந்துள்ளன. குறிப்பாக, உயிரிழப்பு அபாயம் மிக அதிகம் என ஏ.ஐ. கணித்த நோயாளிகளில் 53 சதவீதம் பேர் 90 நாட்களுக்குள் உயிரிழந்தனர்.

புகைப்பிடித்தல், அதிகமாக மது அருந்துதல், போதைப்பொருள் பயன்பாடு ஆகிய தகவல்களும் இந்தக் கணிப்பில் முக்கியமான தரவுகளாக இருந்துள்ளன. குறிப்பாக, தற்போது புகைப்பிடிப்பவர்கள், புகைப்பழக்கத்தைக் கைவிட்டவர்கள், ஒருபோதும் புகைப்பிடிக்காதவர்கள் என மூன்று பிரிவினரின் முகத் தோற்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்தத் தொழில்நுட்பம், நோயாளியின் உடல்நிலையைப் புரிந்துகொள்ளவும், யாருக்கு கூடுதல் மருத்துவக் கவனிப்பு தேவைப்படலாம் என்பதை மதிப்பிடவும் மருத்துவர்களுக்கு உதவும் வாய்ப்புள்ளது.

ஆய்வுகள் தொடர வேண்டும்

இருப்பினும், புகைப்படத்தை வைத்து ஒருவரின் ஆயுட்காலத்தை ஏ.ஐ.யால் உறுதியாகக் கூற முடியாது. இது ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் உயிரிழப்பு அபாயத்தை மட்டுமே மதிப்பிடுகிறது. மருத்துவப் பயன்பாட்டுக்கு முன்பு, இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை. அந்த ஆய்வுகள் வெற்றியடைந்தால், ஒரு சாதாரணப் புகைப்படமே நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சையைத் திட்டமிட உதவும் புதிய கருவியாக மாறலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com