ஒருமுறை சார்ஜ் செய்தால் 730 கி.மீ வரை பயணம் செய்யலாம்...டென்ஸா கார் இந்தியாவில் அறிமுகம்

இரண்டாவது வரிசையில் அமரும் பயணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 730 கி.மீ வரை பயணம் செய்யலாம்...டென்ஸா கார்  இந்தியாவில் அறிமுகம்
Published on: 

பிஒய்டி (BYD) நிறுவனத்தின் பிரீமியம் கார் பிராண்டான டென்ஸா (Denza), இந்தியாவில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அதிக சொகுசு வசதிகளைக் கொண்ட D9 எலக்ட்ரிக் எம்பிவி கார் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டென்ஸா D9 காரின் முன்பக்கம் பெரிய கிரில் அமைப்புடன் கம்பீரமான தோற்றத்தைப் பெற்றுள்ளது. செங்குத்தான குரோம் பட்டைகள், எல்.இ.டி பகல்நேர விளக்குகள் மற்றும் நவீன முகப்பு விளக்குகள் இதன் தோற்றத்தை மேலும் மெருகேற்றுகின்றன. பக்கவாட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் முழு அகலத்திற்கும் நீளும் எல்.இ.டி விளக்குகள் கவனம் ஈர்க்கின்றன.

7 பேர் பயணிக்கலாம்

இந்த காரில் எளிதாக ஏறி இறங்க வசதியாக எலெக்ட்ரிக் கன்ட்ரோலில் இயங்கும் ஸ்லைடிங் கதவுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.பொத்தானை அழுத்தியோ அல்லது சென்சார் மூலமாகவோ கதவுகளை இயக்கலாம். உட்புறத்தில் 2 + 2 + 3 என்ற இருக்கை அமைப்புடன் மொத்தம் ஏழு பேர் பயணிக்கலாம். மூன்று வரிசைகளிலும் நப்பா லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. கருப்பு மற்றும் பழுப்பு, கருப்பு மற்றும் பழுப்பு கலந்த வெளிர் நிறம், முழுமையான கருப்பு என மூன்று விதமான உட்புற வண்ணத் தேர்வுகள் உள்ளன.

குறிப்பாக இரண்டாவது வரிசையில் அமரும் பயணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் இருக்கைகள், காற்றோட்ட வசதி, மசாஜ் வசதி, மெமரி செயல்பாடு மற்றும் கால்களை நீட்டிக்க உதவும் ஒட்டோமான் வசதி ஆகியவை நீண்ட தூரப் பயணத்தையும் சுகமாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெவியாலெட் ஆடியோ

முன்பக்கத்தில் 15.6 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாவது வரிசை பயணிகளுக்கு இருக்கை வசதிகளைக் கட்டுப்படுத்த தனித்தனி தொடுதிரைகள் உள்ளன. மேலும், 16 ஸ்பீக்கர்கள் கொண்ட டெவியாலெட் ஆடியோ சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. இரட்டை சன்ரூஃப் அமைப்பு, மூன்று மண்டலங்களுக்கான தானியங்கி ஏசி, சுற்றுப்புற விளக்குகள், வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் இரண்டாவது வரிசை பயணிகளுக்கான குளிர்சாதனப் பெட்டி ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக ஒன்பது ஏர்பேக்குகள், ஏடிஏஎஸ் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா மற்றும் டயர் காற்றழுத்த கண்காணிப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

டென்ஸா D9 காரில் 115.07 kWh திறன் கொண்ட பிஒய்டி பிளேடு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் அமைந்துள்ள ஒற்றை மின்சார மோட்டார் அதிகபட்சமாக 462 எச்பி பவரையும், 365 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. முன்சக்கரங்களுக்கு சக்தியை வழங்கும் இந்த கார் சிறப்பான செயல்திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரூ.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 730 கிமீ வரை பயணிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது என்இடிசி சோதனை முறையின்படி கணக்கிடப்பட்ட ரேஞ்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் டென்ஸா D9 காருக்கு ரூ.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ரூ.10 லட்சம் டோக்கன் தொகையில் தொடங்கியுள்ளது. இந்த காருக்கு ஆறு ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கிமீ வரையும், பேட்டரிக்கு எட்டு ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிமீ வரையும் வாரண்டி வழங்கப்படுகிறது. சென்னை, குருகிராம், மும்பை, அகமதாபாத், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு நகரங்களில் பிரத்யேக டென்ஸா ஷோரூம்கள் வாயிலாக இந்த கார் விற்பனை செய்யப்பட உள்ளது

X