

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்குவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவிவருகிறது.
தீபாவளி போனஸ் கூப்பன்கள் மற்றும் ஆஃபர்களை, "ஏர்டெல் - தீபாவளி கா தயோஹார்" என்ற பெயரில் வழங்குவதாக தகவல் வெளியானது. ரூ.2,000 தீபாவளி ரீசார்ஜ், ரூ.8,000 மாதாந்திர போனஸ் அல்லது அமேசான், ஃபிளிப்கார்ட் குலுக்கல் கூப்பன்களை வழங்குவதாக வாட்ஸ்அப் வாயிலாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதுபோன்ற தகவல்கள் முற்றிலும் போலியானவை. ஏர்டெல் இணையதளத்திலோ, ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பிலோ அதுபோன்று எந்தவிதமான சலுகைகளும் குறிப்பிடப்படவில்லை. எனவே, மக்கள் உஷாராக இருப்பது அவசியம்.
இந்த போலியான தகவல் பொதுவாக வாட்ஸ்அப் வழியாக தெரிந்தவர்கள் மூலமாக வரலாம், சில குழுக்களில் பகிரப்படலாம். சில நேரங்களில் கணக்கு ஹேக் செய்யப்பட்ட நபரிடமிருந்தும் வரலாம். அதில் ஏர்டெல் சார்பில 2,000 ரூபாய் மதிப்புள்ள "தீபாவளி பரிசு" வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கும். அந்த பரிசை பெறுவதற்கு கிளிக் செய்யும்படி ஒரு லிங்க் இணைக்கப்பட்டிருக்கும்.
அந்த லிங்கை கிளிக் செய்தால், ஏர்டெல் நிறுவனத்தின் அடையாளத்தைப் போலக் காட்சியளிக்கும் ஒரு போலியான இணையதளம் திறக்கும். அது .buzz அல்லது omtav.buzz போன்ற டொமைன்களுடன் இருக்கும்.
அதில் நம்பிக்கை ஏற்படுத்தும்விதமாகவும் ஆசையை தூண்டும் விதமாகவும் சில பயனர்களின் கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும். அதில், "நான் இது போலியானது என்று நினைத்தேன், ஆனால் எனக்குப் பணம் கிடைத்துவிட்டது" என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் அந்த தகவலை பெற்ற நபருக்கு எளிதில் சந்தேகம் ஏற்படாது.
அந்த தளத்தில் செல்போன் எண் மற்றும் பிற விவரங்களை கேட்கும். அத்துடன் பரிசைப் பெறுவதற்கு, அந்த லிங்கை 5 முதல் 10 வாட்ஸ்அப் குழுக்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ பகிர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கும். இவ்வாறு இந்த மோசடி மிக வேகமாகப் பரவுகிறது.
பயனர்கள் தங்கள் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பித்தவுடன், ஹேக்கர்கள் அவற்றைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பயனர்களின் வாட்ஸ்அப் (WhatsApp) கணக்கைக் கைப்பற்றலாம், உங்கள் யுபிஐ (UPI) செயலிகளை முடக்கலாம் அல்லது வங்கி கணக்கு தொடர்பான ஓடிபி (OTP) எண்களை கைப்பற்றி பணத்தை அபேஸ் செய்யலாம்.
எனவே, இந்த விஷயத்தில் மக்கள் உஷாராக இருக்கவேண்டும். இதுபோன்ற ஒரு செய்தி உங்களுக்ளுக்கு வரப்பெற்றால், அதை கிளிக் செய்யாமல், தகவலை உடனடியாக நீக்கிவிடுவது நல்லது, மற்றவர்களுக்கும் அனுப்ப வேண்டாம்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அடையாளம் தெரியாத தளங்கள் வாயிலாக பண வெகுமதிகளை வழங்குவதில்லை. ஏர்டெல் நிறுவனத்தின் சலுகைகளை அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ 'Airtel Thanks' செயலி அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக சரிபார்க்கவும்.