

புதுடெல்லி,
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் (Outlook) மற்றும் டீம்ஸ் (Teams) போன்ற சேவைகளில் ஏற்பட்ட முடக்கம் பல மணிநேரங்களாக நீடிக்கிறது. இந்த தொழில்நுட்ப சிக்கலைச் சரிசெய்ய அந்நிறுவனம் போராடி வரும் நிலையில், இந்த செயலிழப்பு, ஏராளமான பயனர்கள், நிறுவனங்கள் மற்றும் சில அரசு செயல்பாடுகளை பாதித்துள்ளது.
மைக்ரோசாப்ட் சேவைகளில் நேற்று இரவு ஏற்பட்ட கோளாறு, இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விமான நிறுவனங்களுக்கு பயணிகள் அனுப்பும் மின்னஞ்சல்கள் கிடைப்பதிலும், அவற்றுக்குப் பதில் அளிப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் Outlook மின்னஞ்சலைப் பயன்படுத்தும் அலுவலகங்கள் மற்றும் தனிநபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இணைய சேவைகளில் பிரச்சனை ஏற்படும்போது பயனர்கள் புகார் அளிக்கும் Downdetector இணையதளத்தில், நேற்று இரவு முதல் Outlook தொடர்பான புகார்களை பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.
நேற்று இரவு 2000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்த நிலையில் இன்று அதிகாலையில் இந்த எண்ணிக்கை 300 ஆக குறைந்தது. ஆனால் இன்று காலையில் அலுவலக நேரம் தொடங்கியபின் இந்த எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது. காலை 10 மணிக்கு 3800 பேர் புகார் பதிவு செய்திருந்தனர். அதன்பின் படிப்படியாக குறைந்து மாலையில் 1600 புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனே, லே மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல டெல்லியில் இருந்து தர்பங்கா மற்றும் மும்பைக்கு இயக்கப்பட வேண்டிய மேலும் 2 ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் தாமதமாகியுள்ளன. மைக்ரோசாப்ட் சேவைகளில் ஏற்பட்ட கோளாறின் எதிரொலியாக இந்த விமானங்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியதால் பயணிகளிடமிருந்து வரும் மின்னஞ்சல்களைப் பெறுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக இண்டிகோ அறிவித்துள்ளது. இதேபோல ஆகாசா ஏர் நிறுவனமும் மின்னஞ்சல் சேவையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியதைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விமானங்கள் வழக்கம்போல இயக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. பயணிகளிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் தங்களுக்குத் தடையின்றிக் கிடைப்பதற்காக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் அனுப்பும் மின்னஞ்சல்கள் தொடர்ந்து கிடைப்பதாகவும், வழக்கம்போல 24 மணி நேரத்திற்குள் பதில் அளித்து வருவதாகவும் கூறியுள்ளது. தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாகவும் பயணிகள் வழக்கம்போலத் தொடர்புகொள்ளலாம் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் கோளாறின் எதிரொலியாக விமான நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், டெல்லி விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் தங்களது விமானத்தின் நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு, பயணம் செய்யவுள்ள விமானம் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் இணையதளம் அல்லது மொபைல் செயலியில் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியதால் செயற்கை நுண்ணறிவு சேவைகளை வழங்கும் OpenAI, Anthropic நிறுவனங்களின் சில வசதிகளிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ChatGPT சேவையை வழங்கும் OpenAI நிறுவனம், மைக்ரோசாப்ட் சேவைகளை ChatGPT உடன் இணைத்துப் பயன்படுத்தும் வசதியில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உதாரணமாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல்கள், கோப்புகள் உள்ளிட்ட தகவல்களை ChatGPT மூலம் பயன்படுத்துவதற்கான இணைப்புகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் புதிய இணைப்புகளை ஏற்படுத்துவதிலும், ஏற்கெனவே இணைக்கப்பட்ட சில வசதிகளைப் பயன்படுத்துவதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் அளித்த விளக்கம் வருமாறு:
மைக்ரோசாப்ட் சேவைகளை இயக்கும் சில சர்வர்கள் திடீரெனச் செயல்படாமல் போயுள்ளன. இதனால் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த மற்ற சர்வர்களுக்கு அதிக வேலை அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமான பயனர்கள் மின்னஞ்சல் உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்த முயன்றதால், அந்தச் சர்வர்களாலும் அனைத்தையும் சமாளிக்க முடியவில்லை. இந்த செயலிழப்பு அதன் எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன் மற்றும் மின்னஞ்சல் சேவைகளுடன் தொடர்பு கொள்ளும் பலதரப்பட்ட மைக்ரோசாப்ட் 365 சேவைகளைப் பாதித்து வருகிறது.
செயல்படாமல் போன சர்வர்களை மீண்டும் இயக்கவும், பயனர்களின் தகவல்களை மற்ற சர்வர்கள் வழியாக அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில சர்வர்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியபோதும், அதிகமானோர் ஒரே நேரத்தில் பயன்படுத்தியதால் அவை மீண்டும் செயலிழந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட சர்வர்களைச் சரிசெய்வதுடன், பழைய மென்பொருள் அமைப்பைப் பயன்படுத்தி சில சர்வர்களை மீண்டும் உருவாக்கி சோதிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை நிலவரப்படி, நிலைமை படிப்படியாகச் சீரடைந்து வருவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பின் சில பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன என்றும், தற்போது, பிற பிராந்தியங்களில் பாதிக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளிலும் மீட்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.