

சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் களமிறங்க ஓபன்ஏஐ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் நிறுவனத்தின் பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட டைமன்சிட்டி 9600 சிப்செட் பயன்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணிகளை வேகமாக மேற்கொள்ளும் வகையில் 2 பிரத்யேக ஏஐ பிராசஸிங் யூனிட்கள் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர எல்பிடிஆர் 6 ரேம், யுஎப்எஸ் 5.0 சேமிப்பக வசதி உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய ஸ்மார்ட்போன்களில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி செயலிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், ஓபன்ஏஐ உருவாக்கும் ஸ்மார்ட்போனில் ஏஐ உதவியாளருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.அதாவது, பயனர்கள் தனித்தனி செயலிகளை திறந்து பயன்படுத்துவதற்கு பதிலாக, தங்களுக்குத் தேவையான பணிகளை ஏஐ உதவியாளர் மூலம் மேற்கொள்ளும் வகையில் இந்த போன் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனை தயாரிக்கும் பணியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான எப்.ஐ.எச் மொபைல் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த புதிய ஸ்மார்ட்போன் 2027-ம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2028-ம் ஆண்டில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. எனினும், ஸ்மார்ட்போன் தயாரிப்பு, அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அறிமுக தேதி குறித்து ஓபன்ஏஐ நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.