

5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'மைக்கோ 3' (Miko 3) கற்றல் ரோபோ கவனம் பெற்றுள்ளது. சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, குழந்தைகளுடன் உரையாடுவது மட்டுமின்றி, விளையாட்டுகள் மற்றும் பல்வேறு பயிற்சிகள் மூலம் அவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கிறது.
மைக்கோ 3 ரோபோவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுடன் உரையாடவும், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும். மேலும், கதைகள், விளையாட்டுகள், குறியீட்டாக்கம்(Coding) மற்றும் மொழிப் பயிற்சிகள் வாயிலாக குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்க்க உதவுகிறது.
இந்த ரோபோவில் தொடுதிரை வசதி இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, முகம் மற்றும் குரலை அடையாளம் காணும் தொழில்நுட்பங்களும் உள்ளன. இதனால் குழந்தைகள் ரோபோவுடன் எளிதாக தொடர்புகொண்டு பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட முடியும்.
குழந்தைகள் ரோபோவை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள், அவர்களின் கற்றல் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது உள்ளிட்ட விவரங்களைச் செயலி(App) மூலம் பெற்றோர் கண்காணிக்கலாம். இதன் மூலம் குழந்தைகளின் பயன்பாட்டு நேரம் மற்றும் கற்றல் செயல்பாடுகளைப் பெற்றோர் தொடர்ந்து அறிந்துகொள்ள முடியும்.
குழந்தைகளின் அறிவுத் திறன் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) சார்ந்த விளையாட்டுகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், புதிர்கள், பாடல்கள், யோகா பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் வழங்கப்படுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கான மைக்கோ மேக்ஸ் சந்தா (Miko Max Subscription) கொண்ட தொகுப்பில், டிஸ்னி உள்ளிட்ட நிறுவனங்களின் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு மற்றும் கற்றல் சார்ந்த உள்ளடக்கங்களையும் கூடுதலாகப் பெற முடியும். குழந்தைகளின் பொழுதுபோக்கையும், கற்றலையும் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைக்கோ 3 ஏ.ஐ. ரோபோவின் விலை சுமார் ரூ.23,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.