இனி ஸ்டிக்கர்களும் ஒலி எழுப்பும்; வாட்ஸ்அப்பில் புதிய வசதி

பயனர்கள் தங்களுக்குப் பிடித்த ஒலிகளைச் சேர்த்து சொந்த ஸ்டிக்கர்களையும் உருவாக்கும் வசதி வரலாம்.
இனி ஸ்டிக்கர்களும் ஒலி எழுப்பும்;  வாட்ஸ்அப்பில் புதிய வசதி
Published on: 

காணொலிகளை ஒலியுடன் கூடிய அசையும் ஸ்டிக்கர்களாக மாற்றும் வாய்ப்பும் இருக்கிறது. தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு செயலியில் உருவாக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப் புதிய அப்டேட்

குறுஞ்செய்தி அனுப்பும் செயலியாக அறிமுகமான வாட்ஸ் அப், தற்போது உலகின் மிகவும் பிரபலமான தகவல் தொடர்பு தளங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத செயலியாக மாறியுள்ள வாட்ஸ் அப்பை இந்தியாவில் மட்டும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த செயலியை உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி, புகைப்படம், காணொளி, ஒலிப்பதிவு மற்றும் குரல், காணொளி அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குவதால் இந்த தளம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வாட்ஸ் அப் அவ்வப்போது புதிய அப்டேட்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

ஸ்டிக்கர்களும் ஒலி எழுப்பும்

வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு ஸ்டிக்கர்களை அனுப்பிப் பேசுவதை விரும்புகிறீர்களா? இனி அந்த ஸ்டிக்கர்களே சத்தம் எழுப்பும் புதிய வசதியை உருவாக்கி வருகிறது, வாட்ஸ்அப். தற்போது புகைப்பட வடிவிலும் அசையும் படங்களாகவும் ஸ்டிக்கர்களை அனுப்ப முடிகிறது. புதிய வசதி அறிமுகமானால், ஒலியையும் சேர்த்து அனுப்பலாம். பெறுபவர் அந்த ஸ்டிக்கரைத் தொட்டால், அதனுடன் இணைக்கப்பட்ட ஒலி கேட்கும். ஒலியைக் குறிக்க ஸ்டிக்கரில் தனி சின்னமும் இடம்பெறலாம்.

விரைவில் வரும் அப்டேட்

அதுமட்டுமின்றி, பயனர்கள் தங்களுக்குப் பிடித்த ஒலிகளைச் சேர்த்து சொந்த ஸ்டிக்கர்களையும் உருவாக்கும் வசதி வரலாம். காணொலிகளை ஒலியுடன் கூடிய அசையும் ஸ்டிக்கர்களாக மாற்றும் வாய்ப்பும் இருக்கிறது. தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு செயலியில் உருவாக்கப்பட்டு வருகிறது. சோதனை பயனர்களுக்குக் கூட இன்னும் வழங்கப்படவில்லை. வரும் வாரங்களில் சோதனை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com