

மக்களின் அதிகமான பயன்பாட்டில் இருக்கும் பேமெண்ட் சேவையாக இருக்கும் யு.பி.ஐ. தளத்தின் தினசரி பரிமாற்ற அளவு வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு நாளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது.
ஒருவருக்கொருவர் வங்கிக்கணக்கு வழியாக உடனடி பணப்பரிமாற்றம் செய்ய யு.பி.ஐ. சேவை பயன்படுகிறது. தேசிய பண பரிமாற்ற கழகம், இச்சேவையை நடத்தி வருகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில், யு.பி.ஐ. பரிமாற்றங்களின் மொத்த மதிப்பு மற்றும் மொத்த அளவு இதுவரை இல்லாத அதிகபட்சமாக பதிவாகி உள் ளது. யு.பி.ஐ. பரிமாற்றங்களின் அளவு 2 ஆயிரத்து 547 கோடியாகவும், யு.பி.ஐ. பரிமாற்றங்களின் மதிப்பு ரூ.31 லட்சத்து 52 ஆயிரம் கோடியாக வும் இருந்துள்ளது.
அந்தவகையில், அக்டோபர் மாதத்தில் யு.பி.ஐ. பரிமாற்றங்களின் சராசரி தினசரி மதிப்பு முதல்முறையாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள் ளது. சராசரி தினசரி மதிப்பு ரூ.1 லட்சத்து 871 கோடியே 30 லட்சமாக இருந்தது.
அதுபோல், யு.பி.ஐ. பரிமாற்றங்களின் சராசரி தினசரி அளவு 82 கோடியே 16 லட்சமாக இருந்தது. பண்டிகை காலத்தையொட்டி, இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில், யு.பி.ஐ. பரிமாற்றங்களின் சராசரி தினசரி மதிப்பு ரூ.97 ஆயிரத்து 913 கோடியாகவும், சராசரி தினசரி அளவு 80 கோடியே 22 லட்சமாகவும் இருந்தது.
யுபிஐ சேவையில் எம்டிஆர் கட்டணம் விதிக்கப்பட்டால் பெரும் பகுதி வர்த்தகம் ரொக்கம் வாயிலாக நடக்கும் என அச்சம் நிலவும் வேளையில் தினசரி 1 லட்சம் கோடி என்ற நடைமுறை சாதனை கட்டண விதிப்பைத் தள்ளிப்போட வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.