தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை-பக்தர்களின்றி எளிமையாக நடந்தது

தர்மபுரி மாவட்டத்தில் தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை, பக்தர்களின்றி எளிமையாக நடந்தது.
தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை-பக்தர்களின்றி எளிமையாக நடந்தது
Published on

தர்மபுரி:

தைப்பூச திருவிழா

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவ சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஆகம விதிகள்படி கோவில் வளாகத்திலேயே பல்வேறு வாகனங்களில் உலா வந்தார்.

விழாவின் முக்கிய நாளான தைப்பூச திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. கொரோனா பரவல் காரணமாக கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

திருக்கல்யாணம்

இதைத்தொடர்ந்து நேற்று இரவு சாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் மயில் வாகனத்தில் சாமி உற்சவம் நடந்தது. இன்று (புதன்கிழமை) விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) சிவ சுப்பிரமணிய சாமி தேரோட்டம் நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்படி தேரோட்டம் கோவில் வளாகத்திலேயே நடைபெற உள்ளது.

அதன்படி காலை 7 மணிக்கு பெண்கள் மட்டும் வடம் பிடிக்கும் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்கும் தேரோட்டமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

எளிமையாக நடந்தது

தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்ரமணிய சாமி கோவில், நெசவாளர் நகர் வேல் முருகன் கோவில், எஸ்.வி. ரோடு சுப்ரமணிய சாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதேபோல் தர்மபுரி நகர், காரிமங்கலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜை, அலங்கார சேவை நடந்தது.

இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், பக்தர்களின்றி எளிமையாக நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com