தேரழுந்தூர் ஆமருவியப்பன் பெருமாள் கோவில் தேரோட்டம்

தேரழுந்தூர் திருத்தலம், ஆழ்வாரால் 45 பாசுரங்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 10-வது திவ்ய தேசமாகும்.
தேரழுந்தூர் ஆமருவியப்பன் பெருமாள் கோவில் தேரோட்டம்
Published on

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் பழமை வாய்ந்த செங்கமலவல்லி உடனாகிய ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊரான இங்கு அமைந்துள்ள இந்த ஆலயம் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. திருமங்கை ஆழ்வாரால் 45 பாசுரங்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 10-வது திவ்ய தேசமாகும். இக்கோவிலில் மூலவர் ஸ்ரீதேவாதிராஜன் என்ற பெயரிலும், உற்சவர் ஆமருவியப்பன் என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர்.

புகழ் வாய்ந்த இவ்வாலயத்தின் வைகாசி பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம்தோறும் பெருமாள் வீதிஉலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. செங்கமலவல்லி உடனாகிய ஆமருவியப்பன் பெருமாள் தேரில் எழுந்தருள செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை செய்யப்பட்டு தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் 'கோவிந்தா, ஆமருவியப்பா' என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com