

திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (வயது 24). இவர் கும்ப கோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை உமாமகேஸ்வரபுரம் காவிரி ஆற்றின் படித்துறையில் வசந்தபிரியா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராமச்சந்திரன், செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், மணிவேல், மகாதேவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் வசந்தபிரியாவின் உடலை போலீசார் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட ஆசிரியை வசந்தபிரியாவுக்கும், வலங்கைமானை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 28-ந் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின்னரும் வழக்கம்போல் வசந்தபிரியா பள்ளிக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை வழக்கம்போல் இவர் பள்ளிக்கு பணிக்கு வந்தார்.
மாலையில் பள்ளி முடிந்ததும் பள்ளியில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. சம்மந்தமே இல்லாமல் காவிரி ஆற்றின் படித்துறையில் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அங்கு யாருடன் அவர் வந்தார்? அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. கொலை நடந்த இடத்தில் இரண்டு செல்போன்கள், பேனா கத்தி ஆகியவை கிடந்தது. அவற்றை திருவிடைமருதூர் போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், கொலையாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.