

ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் பக்தர்கள் இன்றி தைப்பூச திருவிழா நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.
தைப்பூச திருவிழா
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் எல்க்ஹில் முருகன் கோவில் உள்ளது. இங்கு முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளை குறிக்கும் வகையில் 6 மண்டபங்கள், 108 திருநாமங்களை நினைவு கூறும் பொருட்டு 108 படிக்கட்டுகள் உள்ளன. மேலும் மலேசியாவில் உள்ளதைப் போன்று 40 அடி உயர முருகன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது தமிழகத்திலேயே உயரமான சிலையாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டில் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை 10.30 மணிக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜை நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச திருவிழா நடந்தது. காலை 8.45 மணிக்கு பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 10.45 மணிக்கு மூலவர், உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாகவும், தடுப்பு நடவடிக்கையாகவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் பக்தர்கள் இன்றி கோவிலுக்குள் பூசாரிகள், நிர்வாகிகள் மட்டும் கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்தனர். சுவாமி வீதி உலா கோவில் மண்டபத்துக்குள் நடந்தது. முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார்.
தேரோட்டம் ரத்து
வழக்கமாக முக்கிய வீதிகளில் சுவாமி உலா வருவார். கொரோன தடுப்பு நடவடிக்கையாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் நடைபெற வில்லை. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க கடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை கோவில்கள் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் 40 அடி உயர முருகன் சிலையை முன்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது தொடர்ந்து கோவில் நுழைவு வாயில் மற்றும் சிறிது தொலைவில் உள்ள நுழைவுவாயில் மூடப்பட்டு பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வில்லை. அவர்கள் வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூச திருவிழாவின் போது படிக்கட்டுகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். நேற்று கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊட்டி லோயர் பஜாரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. அங்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் ஆனந்தமலை முருகன் கோவில், அன்னமலை முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. கோவில்களுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி சக்திமலை பகுதியில் உள்ள வெற்றிவேல் முருகன் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான கோவிலாகும். இந்தக் கோவிலில் தைப்பூசத் திருநாளை ஒட்டி ஆண்டுதோறும் திருக்கல்யாணம் மற்றும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேர் வடம் இழுக்கும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டிருந்தது. கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினம்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
தைப்பூசத் தினமான நேற்று காலை 5.30 மணிக்கு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு மாலமந்திர ஹோமமும், 7 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு வள்ளி, தெய்வானை சகிதம் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தேர் வடம் இழுக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்ததால், நேற்று மாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மூர்த்தியை வைத்து சிறப்பு பூஜைகள் செய்த பின், தேர்வடம் இழுக்கும் நிகழ்ச்சிக்கு பதிலாக உற்சவ மூர்த்தியை கோவில் கமிட்டியினர் தங்களது தோளில் சுமந்தவாறு கோவிலை 3 முறை வலம் வந்தனர்.
இதேபோல் தைப்பூசத்தையொட்டி கோத்தகிரி அருகே உள்ள காத்துகுளி, நட்டக்கல், தேன்மலை, பர்ன்சைடு முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.