காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது- தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது- தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on

மும்பை, 

காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

போராட்டம்

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இந்துக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தி காஷ்மீரில் பண்டிட்டுகள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே கூறியதாவது:-

அரசு படுதோல்வி

பா.ஜனதா கட்சி தலைவர்கள் தங்கள் சொந்த அரசியல் நோக்கத்திற்காக "தி காஷ்மீர் பைல்ஸ்" படத்தை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக உள்ளனர்.

ஆனால் இடம் பெயர்ந்த காஷ்மீர் பண்டித்துகளுக்கு பாதுகாப்பு வழங்கிய ஒரே மாநிலம் மராட்டியம் மட்டும் தான், அதே நேரம் பா.ஜனதா அவர்களின் உணர்வுகளுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறது.

இந்துக்கள் மற்றும் காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு படுதோல்வி அடைந்துள்ளது. உள்துறை மந்திரியாக நாட்டின் குடிமக்களின் உயிரை பாதுகாப்பது அமித்ஷாவின் கடமையாகும்.

மத்திய மந்திரி தனிப்பட்ட முறையில் அனைத்து காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

சமத்துவத்தை உறுதி செய்யவேண்டும்...

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் பாதுகாப்பாக தங்கள் தாயகம் திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி அளித்தது.

ஆனால் உறுதியளித்தப்படி காஷ்மீர் பண்டிட்டுகள் பாதுகாப்பாக திரும்ப முயற்சிகள் ஏதும் எடுக்கப்படாததால், அவர்கள் அளித்த வாக்குறுதி மேலும் ஒரு வெற்று வாசகமாக மாறிவிட்டது.

மதம் மற்றும் சாதி அடிப்படையிலான அரசியலை பா.ஜனதா கைவிட வேண்டும். இந்திய குடிமக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com