

மங்களூரு-
கடல் மார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதாக வந்த புகார் எதிரொலியாக அரபிக்கடலில் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தங்கம் கடத்தல்
கர்நாடக கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் மங்களூரு பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் இருந்து மங்களூருவுக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் துபாயில் இருந்து விமானத்தில் மங்களூருவுக்கு வந்த பயணிகளிடம் ரூ.2 கோடி அளவுக்கு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரபிக்கடலில் கண்காணிப்பு
இந்த நிலையில் விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்தால் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கி விடுவதால், வெளிநாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. இதனால், கடலோர காவல் படையினர் அரபிக்கடல் பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். 24 மணி நேரமும் கடலில் ரோந்து சென்று வருகிறார்கள்.
மங்களூருவில் இருந்து கார்வார் வரை கடல் மார்க்கத்தை கண்காணிக்க கூடுதல் படகுகளில் கடலோர காவல் படையினர் ரோந்து சென்று கொண்டு வருகிறார்கள். அவர்களுடன் சுங்கத்துறை அதிகாரிகளும் ரோந்து பணியை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை கடல் மார்க்கமாக தங்கம் கடத்தல் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
சுங்கத்துறை அதிகாரி
இதுகுறித்து மங்களூரு சுங்கத்துறை அதிகாரி டாக்டர் மிதோஷ் ராகவன் கூறுகையில், வளைகுடா நாடுகளில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படும் சம்பவம் அதிகமாக நடந்து வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பால் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடத்தல்காரர்கள் கடல் வழியாக தங்கத்தை கடத்த திட்டமிட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் அரபிக்கடலில் கடலோர காவல் படையினருடன் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றார்.