

வத்திராயிருப்பு,
கூமாபட்டி முத்தாலம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
நேர்த்திக்கடன்
வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள முத்தாலம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் மழை வேண்டி தேர் திருவிழா நடத்துவது பாரம்பரிய வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருவிழா மிகவும் சிறப்பாக நடந்தது. முதல் நாள் இரவு அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து அதிகாலையில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு சக்தி ஏற்று வைபவம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெண்கள் மாவிளக்கு எடுத்தும் சிலைகளை காணிக்கையாக செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேரோட்டம்
நான்கு ரத வீதிகள் வழியாக ஊரை சுற்றி வந்த தேரானது இறுதியில் காலை 11 மணிக்கு நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
அங்கிருந்து அம்மன் இறக்கப்பட்டு கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் அம்மனை கரைப்பதற்காக மேளதாளங்கள் முழங்க எடுத்துச்சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் நின்று பூக்களை தூவி அம்மனை வழியனுப்பி வைத்தனர்.
பொங்கல் திருவிழா
வத்திராயிருப்பு அருகே உள்ள கொடிக்குளத்தில் முத்தாலம்மன் சுவாமிக்கு பக்தர்கள் மழை வேண்டி பொங்கல் திருவிழா நடத்தி வழிபட்டனர்.
அதிகாலையில் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோவில் முன்பாக பொங்கல் வைத்து படையல் வைத்து வழிபட்டனர். பக்தர்கள் ஆடு, கோழிகளை பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு பூஜைகள், மஞ்சள் நீராட்டும் வைபவம் போன்ற நிகழ்ச்சிக்கு பின்னர் இரவில் அம்மனை கரைப்பதற்காக எடுத்து சென்றனர். இவ்விரு திருவிழாக்களையும் முன்னிட்டு கூமாபட்டி பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் மக்கள், திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.