வாரியார் காட்டும் நல்வழி

முருகப்பெருமானின் பக்தராகவும், சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளராகவும் இருந்தவர், கிருபானந்த வாரியார். இவர் பல்வேறு மேடைகளில் நகைச்சுவையோடு மக்களைச் சேரும் வகையில் பல நல்ல விஷயங்களை எடுத்துரைத்துள்ளார்.
வாரியார் காட்டும் நல்வழி
Published on

அவர் கூறிய சில தத்துவ பாதைகளைப் பற்றி சிறிய குறிப்பாக பார்ப்போம்.

மூட்டைப் பூச்சியைப் போல் பிறரைத் துன்புறுத்தி வாழக்கூடாது. எலியைப்போலத் திருடி வயிறு வளர்க்கக் கூடாது. கறையான்களைப் போல் பிறர் பொருளை நாசப்படுத்தி வாழக்கூடாது. தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுவதே அமைதியான வாழ்க்கை.

நல்ல நூல்களை சிரமப்பட்டு படிக்க வேண்டும். உயர்ந்தோருடன் பழக வேண்டும். ஆசிரியருக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஞானமும் கல்வியும் பெற வேண்டுமென்றால், ஒரு பெண் தன் கணவனைக் கொன்றுவிட்டுப் பிள்ளை வரம் கேட்ட கதை போலாகும். நல்லாசிரியர் ஒருவரை நாடிப்பெறும் கல்வியே ஞானத்தை கொண்டதாகும்.

குடும்பம் மரத்தைப் போன்றது. அதற்கு வேர் மனைவி, அடிமரம் கணவன், கிளைகள் குழந்தைகள். பலவித பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் நிழல் தந்து, மரம் உறைவிடமாக உதவுவது போல், குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்.

நல்ல உணவுகளை உண்பதால் உடல் வளரும். நல்ல நூல்களைப் படிப்பதால் உணர்வு வளரும். நல்ல உள்ளத்துடன் எப்போதும் இறைவனை நினைப்பதனால் உயிர் வளரும். இம்மூன்றும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள்.

எப்போதும் இறைவனை நினைக்க வேண்டும். அது முடியவில்லையானால் தூங்கி எழுகின்ற போது, சாப்பிடும் போது, உறங்கச் செல்லும் போது போன்ற நேரங்களிலாவது இறைவனை நினைக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com