தொழிற்பேட்டை இங்கே... தொழிற்சாலை எங்கே?

திருபட்டினத்தில் 24 ஆண்டுகளாக பயனற்று கிடக்கும் தொழிற்பேட்டையில் தொழிற்சாலை எங்கே? என்று கேட்கும் அளவுக்கு சமூக விரோதிகளின் கூடாரமாகி உள்ளது.
தொழிற்பேட்டை இங்கே... தொழிற்சாலை எங்கே?
Published on

காரைக்கால்

திரு-பட்டினத்தில் 24 ஆண்டுகளாக பயனற்று கிடக்கும் தொழிற்பேட்டையில் தொழிற்சாலை எங்கே? என்று கேட்கும் அளவுக்கு சமூக விரோதிகளின் கூடாரமாகி உள்ளது.

பிப்டிக் தொழில்மையம்

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் தொகுதிக்குட்பட்ட போலகம் பகுதியில் அரசின் சார்பு நிறுவனமான பிப்டிக் சார்பில் தொழில் மையங்கள் அமைக்கும் வகையில் கடந்த 1999-ம் ஆண்டு பல ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.19 கோடிய 75 லட்சம் செலவு செய்யப்பட்டது.

மேலும் இந்த இடத்தை சுற்றி ரூ.40 லட்சத்து 37 ஆயிரம் செலவில் வேலி, ரூ.24 லட்சத்தில் குடிநீர் தொட்டி, ரூ.2 கோடியில் சாலைகள் என செலவு செய்யப்பட்டது. இந்த தொழிற்பேட்டையில் கண்ணாடி, நறுமணம், மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிப்பு என தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் இதன் மூலம் இளைஞர்கள், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

திறந்தவெளி பார்

ஆனால் நிலம் கையகப்படுத்தப்பட்டு 24 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் தொழிற்பேட்டை இங்கே... தொழிற்சாலைகள் எங்கே? என கேட்கும் அளவுக்கு ஒரு தொழிற்சாலை கூட வரவில்லை.

தொழில் வளர்ச்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மரம், செடிகொடிகள் வளர்ந்து தற்போது திறந்தவெளி மதுபாராக மாறியுள்ளது. இரவில் உல்லாச பிரியர்களின் சொர்க்கமாகவும் உள்ளது. இங்கு கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது குடிப்பவர்கள் காலி பாட்டில்களை வீசி விட்டுச் செல்கின்றனர். கண்ணாடி பாட்டில்கள் உடைந்து அங்கு சிதறி கிடப்பதை காண முடிகிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள இந்த தொழிற்பேட்டை பகுதியில் வளர்ந்துள்ள மர, செடிகளை அகற்றி, புதிய தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், புதுச்சேரி அரசும் முடுக்கி விடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com