குறுவை தொகுப்பு திட்டம் விவசாயிகளிடம் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்பு திட்டத்தை விவசாயிகளிடம் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வராஜ் எம்.பி. கூறினார்.
குறுவை தொகுப்பு திட்டம் விவசாயிகளிடம் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார், ஒன்றியக் குழுத் தலைவர் கமலா அன்பழகன் முன்னிலை வகித்தார். இதில் எம். செல்வராஜ் எம்.பி. கலந்து கொண்டு 155 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. தடுப்பூசி, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.

பொது ஊரடங்கால் வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ 4 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி, மக்களுக்கு உரிய காலத்தில் கிடைக்கும் பேருதவியாகும்.அதே நேரத்தில் அரசின் மாத உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஆதரவற்றோருக்கு சில இடங்களில் இவை கிடைக்கவில்லை. தொழில் நுட்ப பிரச்சினையால் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படாத நபர்களே இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாற்று ஏற்பாட்டின் கீழ் இந்த உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது ஊரடங்கை கருத்தில் கொண்டு குறுவை நெல் சாகுபடிக்கு இலவசமாக உழவு செய்துத் தரப்படும் என அறிவிக்கப்பட்டது, அந்த பணி நாகை மாவட்டத்தில் சுணக்கமடைந்துள்ளது. இதனை விரைவுப்படுத்த வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்பு திட்டம் விவசாயிகளிடம் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் இலக்குவன், விவசாய சங்க நிர்வாகி செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com