பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து பெரியார் குறித்த பாடத்தை நீக்கவில்லை; பெரியார் குறித்த பாடத்தை நீக்கவில்லை

பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து பெரியார் குறித்த பாடத்தை நீக்கவில்லை என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து பெரியார் குறித்த பாடத்தை நீக்கவில்லை; பெரியார் குறித்த பாடத்தை நீக்கவில்லை
Published on

பெங்களூரு:

பள்ளி பாடத்திட்டம்

கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் தேசியகவி குவெம்பு, பெரியார், பகத்சிங், பசவண்ணர், அம்பேத்கர் போன்ற பெரிய மகான்களின் வரலாறுகள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக 200 பக்க ஆதாரங்களை கொண்ட கையோட்டை வெளியிட்டு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் சில எழுத்தாளர்கள், பள்ளி பாடத்திட்டத்தில் நாராயணகுரு, பகத்சிங், பசவண்ணர், பெரியார், தேசியகவி குவெம்பு போன்ற மகான்களின் பாடங்கள் நீக்கப்பட்டதாகவோ அல்லது குறைக்கப்பட்டதாகவோ குற்றம்சாட்டி வருகிறார்கள். அதற்காக போராட்டம் நடத்தியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவார் ஒரு தேசபக்தர். அவரJ தேசபக்தி குறித்த விஷயம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை கடுமையாக குறை கூறுகிறார்கள். அந்த எழுத்தாளர்களுக்கு மறைமுக திட்டம் உள்ளது.

வரலாறு குறைப்பு

சித்தராமையா ஆட்சியில் இருந்தபோது, தேசியகவி குவெம்புவின் வரலாறு குறைக்கப்பட்டது. தேசிய கொடி குறித்த பாடல் நீக்கப்பட்டது. சாமுண்டீஸ்வரி சாமி குறித்த தகவல்கள் நீக்கப்பட்டன. கோவில்களின் பெயர்கள், இந்து என்ற பெயர் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன. நமது நாட்டின் இந்து மன்னர்களின் பங்களிப்புகள், நடத்திய போர்கள் குறித்த தகவல்களை நீக்கினர்.

விஜயநகர் பேரரசு ஆட்சி குறித்த விஷயங்களில் சில குறிப்பிட்ட தகவல்களை கைவிட்டனர். இந்திய பிரிவினையின்போது கொல்கத்தாவில் நடைபெற்ற மதக்கலவரங்களை தடுக்க மகாத்மா காந்தி கொல்கத்தாவுக்கு சென்றார். அதுகுறித்த சில தகவல்கள் நீக்கப்பட்டன. மன்னர் சிவாஜி குறித்த பாடம் குறைக்கப்பட்டது.

பெரியார் பாடம்

ரஜபுத் மன்னர்களின் குணங்கள், பண்புகள் குறித்த தகவல்கள் நீக்கப்பட்டன. சித்தராமையா ஆட்சி காலத்தில் இவ்வாறு 150 தவறுகள் செய்யப்பட்டன. ஆனால் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், எங்கள் அரசை குறை சொல்கிறார்கள். தேசியகவி குவெம்பு, அம்பேத்கர் உள்ளிட்ட சில மகான்களின் வரலாறுகள் விஷயத்தில் 8 தவறுகள் நடைபெற்றுள்ளன. அந்த தவறுகளை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த தவறுகளை சரிசெய்து பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளோம். இன்னும் 15 நாட்களில் இந்த தகவல்கள் சேர்க்கப்படும். அதற்காக தற்போது அச்சிட்டு வழங்கப்பட்ட புத்தகத்தை வாபஸ் பெற்று புதிய புத்தகத்தை அச்சிட்டு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறுவது சரியல்ல. சமூக சீர்திருத்தவாதி பெரியார் குறித்த பாடமும் கைவிடப்படவில்லை.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com