ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் நகராட்சி பகுதிகளில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
Published on

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகத்துக்கு 477 அதிநவீன பஸ்களை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்திற்கு 5 வழித்தடங்களில் புதிய பஸ்களை இயக்கும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. விருதுநகர் தொகுதி எம்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா முன்னிலையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி புதிய பஸ்களை கொடியசைத்து இயங்கி வைத்து பேசியதாவது:

குறைந்த கட்டணத்தில் அரசு பஸ்களில் மக்கள் பயணம் செய்வதற்காக தமிழக அரசு பல்வேறு புதிய வழித்தடங்களில் புதிய பஸ்களை அறிமுகம் செய்து இயக்கி வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்துக்கு 25 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக சிவகாசியில் 8 புதிய பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது 5 வழித்தடங்களில் புதிய பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. மேலும 12 புதிய பஸ்கள் விரைவில் சிவகாசி, ராஜபாளையம் பகுதியில் இயக்கப்படும்.

விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெற தேவையான அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி வருகிறது. முக்கூடல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு யூனியனில் உள்ள கிராமப்பகுதிகளுக்கும், சேத்தூர், செட்டியார்பட்டி, சுந்தரபாண்டியபுரம், வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு, கொடிக்குளம் பேரூராட்சிக்கும் தாமிரபரணி தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கொண்டாநகரம் அருகில் தாமிரபரணி ஆற்றுநீரை ஆதாரமாக கொண்டு ராஜபாளையம் நகராட்சிக்கு ரூ.198 கோடி மதிப்பீட்டிலும், சிவகாசி நகராட்சிக்கு ரூ.117 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டிலும், திருத்தங்கல் நகராட்சிக்கு ரூ.89 கோடி மதிப்பீட்டிலும் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் நகராட்சி பகுதிகளில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 755 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.234 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு விரைவில் முதல்அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

வத்திராயிருப்பை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதனை நடைமுறைபடுத்தும்பணி நடைபெற்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் உடனடியாக செயல்படுத்த முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com