நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக் குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள்
Published on

நாமக்கல்,

ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி ஊராட்சிக்கு உட்பட்ட வெங்காயபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

வெங்காயபாளையம் அருந்ததியர் தெருவில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி எவ்வித பராமரிப்பும் இன்றி உள்ளது. 5 ஆண்டுகளாக இந்த தொட்டிக்கு குடிநீரும் ஏற்றப்படவில்லை. இதனால் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, சுமார் 2 கி.மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். இது தொடர்பாக பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தாங்கள் நேரில் ஆய்வு செய்து, எங்கள் பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

இதேபோல் நாமக்கல் அருகே உள்ள சிங்கிலிப்பட்டியில் வசித்து வரும் திருநங்கைகளும் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது :-

சிங்கிலிப்பட்டியில் எங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இந்த பட்டா நிலத்தில் நாங்கள் வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்களின் வீடுகளுக்கு முன்பு பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளோம். அது புறம்போக்கு நிலமாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் வற்புறுத்தி வருகிறார். எனவே அதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com