பாலக்கரை குடிசைமாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகை

வீடு ஒதுக்கீடுக்கு பணம் கட்டிய பொதுமக்கள் பாலக்கரை குடிசைமாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலக்கரை குடிசைமாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகை
Published on

திருச்சி, மார்ச்.23-
வீடு ஒதுக்கீடுக்கு பணம் கட்டிய பொதுமக்கள் பாலக்கரை குடிசைமாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்
திருச்சி பாலக்கரை மெயின்ரோட்டில் ஜெயில்பேட்டை அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (குடிசைமாற்று வாரியம்) சார்பில் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்காக ரூ.31 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டன.
அங்கு மொத்தம் 6 பிளாக்குகளாக 384 வீடுகள் உள்ளன. இங்கு வீடு ஒதுக்கீடு பெற உரிய ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்துடன் தலா ரூ.2 லட்சம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
திடீர் முற்றுகை
இதையடுத்து ஏராளமானோர் பணம் செலுத்தி இருந்தனர். இதில் மின்வாரிய கணக்கிற்கு 6 வீடுகள் போக, பயனாளிகளுக்கு 141 வீடுகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 237 வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன. இதற்கிடையே பணம் செலுத்திய பெரும்பாலானோருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறப்பட்டது. இதனால் பணம் செலுத்திய பலர் நேற்று காலை குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு காந்திமார்க்கெட் போலீசார் குவிக்கப்பட்டனர். பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகளும் அங்கு சென்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வாடகை கூட செலுத்த முடியவில்லை
இது குறித்து போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், நாங்கள் வீடு ஒதுக்கீடு பெற விண்ணப்பித்து பணம் செலுத்தினோம். கடந்த 4 ஆண்டுகளாக காத்து இருந்தும் இதுவரை வீடு ஒதுக்கீடு செய்யவில்லை. தற்போது எங்கள் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாக கூறுகிறார்கள். முறைப்படி எங்கள் வீடுகளுக்கு வந்து களஆய்வு நடத்தவில்லை. வாடகை கூட செலுத்த முடியாத நிலையில் தவித்து வரும் எங்களுக்கு சொந்த வீடு உள்ளதாகவும், வருமானம் அதிகமாக இருப்பதாகவும் தவறாக கூறுகிறார்கள். அப்படி சொந்த வீடு இருந்தால் நாங்கள் ஏன்? பணத்தை கட்டிவிட்டு 4 ஆண்டுகளாக அலைந்து கொண்டு இருக்கிறேம் என்றனர்.
இது குறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் இளம்பரிதி கூறுகையில், வீடு கேட்டு விண்ணப்பித்தவர்கள் பற்றிய களஆய்வு நடத்தப்பட்டதில், ஒரு சிலர் முறைகேடாக வீடு பெற முயன்றது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே வீடு இல்லாத, வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் தங்களுடைய விண்ணப்பம் மீது மறு களஆய்வு நடத்த மனு அளித்தால் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனு அளித்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com