தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கோவில் அர்ச்சகர் பலி; மகன் கதி என்ன?

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கோவில் அர்ச்சகர் பலியானார். அவரது மகனின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கோவில் அர்ச்சகர் பலி; மகன் கதி என்ன?
Published on

நெல்லை,:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராக இருந்து வந்தார். இந்த நிலையில் சுவாமிநாதன் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, குடும்பத்தினருடன் நெல்லைக்கு வந்திருந்தார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் சுவாமிநாதன், அவருடைய மகன் சங்கர சுப்பிரமணியன் (20) மற்றும் சுவாமிநாதனின் அண்ணன் திருமலை முத்துக்குமாரசாமி (66) ஆகிய 3 பேரும் நெல்லை கைலாசபுரத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அவர்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால், திடீரென 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து, திருமலை முத்துக்குமாரசாமியை மீட்டனர். அதற்குள் சுவாமிநாதன், சங்கர சுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள், இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கும், பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சுவாமிநாதனை பிணமாக மீட்டனர். அவர் ஆற்றில் மூழ்கி பலியானது தெரியவந்தது. சுவாமிநாதன் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சங்கர சுப்பிரமணியனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று இரவு 7 மணி வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் தீயணைப்பு துறையினர் தேடும் பணியை நிறுத்தினர். தொடர்ந்து இன்றும் (செவ்வாய்க்கிழமை) தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

சங்கர சுப்பிரமணியன் கதி என்ன? என்பது பற்றி தெரியவில்லை. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com