வேப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வேப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு 23 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
வேப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

கடலூர்,

வேப்பூர் தாலுகா மாங்குளம் பகுதியில் கடந்த 26-ந்தேதி கடலூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையில், அதில் 460 மூட்டைகளில் 23 ஆயிரம் கிலோ (23 டன்) ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது.

தொடர்ந்து அந்த மினி லாரியில் வந்த நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மங்களூர் காலனி முத்துகருப்பன் மகன் ரஞ்சித் (வயது 25), சித்ரவேல் மகன் வேல் முருகன் (30), வேலூர் மாவட்டம் அரியூர்குப்பம் உலகமூர்த்தி மகன் புருஷோத்தமன் (32), கோவிந்தன் மகன் பெருமாள் (36), சங்கராம்பாளையத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் ராமச்சந்திரன் (51), மங்களூர் காலனி ராமலிங்கம் (56) ஆகிய 6 பேர் என்று தெரிந்தது.

ஆந்திராவுக்கு கடத்தல்

அவர்கள் விளாம்பாவூர், வேப்பூர் மற்றும் மங்களூர் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை அதிக விலைக்கு விற்க ஆந்திராவுக்கு கடத்த முயற்சி செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரஞ்சித், வேல்முருகன், லாரி உரிமையாளரான ராமச்சந்திரன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சென்னை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் கடலூர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது

அதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கடலூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவை சிறயைல் இருக்கும் அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com