ஆரே காலனி வனப்பகுதியில் ‘2,700 மரங்களை வெட்டுவது சோக சம்பவம்’; பாடகி லதா மங்கேஷ்கர் எதிர்ப்பு

மும்பை ஆரே காலனி வனப்பகுதியில் மெட்ரோ ரெயில் பணிமனைக்காக 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்டுவது சோக சம்பவம் என்று கூறி பாடகி லதா மங்கேஷ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆரே காலனி வனப்பகுதியில் ‘2,700 மரங்களை வெட்டுவது சோக சம்பவம்’; பாடகி லதா மங்கேஷ்கர் எதிர்ப்பு
Published on

மும்பை,

தொடர்ந்து பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ பணிமனை அமைக்க மெட்ரோ ரெயில் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஆரேகாலனி வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இது சமூக ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுமட்டும் இன்றி திரைத்துறையை சேர்ந்த பலரும், மரங்களை வெட்ட மாநகராட்சி அனுமதி அளித்ததற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மரங்களை வெட்டுவதை எதிர்த்து நடத்த மனித சங்கிலி போராட்டத்தில் நடிகை ஷரத்தா கபூர் கலந்துகொண்டார்.

இதேபோல் சினிமா நட்சத்திரங்கள் தியா மிஷ்ரா, ரவீனா தாண்டன், ரன்தீப் ஹூடா, ஈஷா குப்தா, கபில் சர்மா உள்ளிட்டோர் மாநகராட்சியின் முடிவு குறித்து தங்கள் கவலையை தெரிவித்தனர்.

இந்தநிலையில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இதுகுறித்து நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

2 ஆயிரத்து 700 மரங்களை வெட்டுவது மற்றும் பல உயிரினங்களுக்கான இயற்கை வாழ்விடங்களை ஆக்கிரமிப்பது ஒரு சோக சம்பவமாகும். நான் மாநகராட்சியின் இந்த முடிவை உறுதியாக எதிர்க்கிறேன். அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, காட்டை காப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உளமாற கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com