கிராம மக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டம்

கடையம் அருகே தங்களது சொந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி உள்ளதாக கூறி கிராம மக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
கிராம மக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டம்
Published on

கடையம்,

நெல்லை மாவட்டம் கடையம் அருகே தெற்கு மயிலப்புரம் கிராமம் உள்ளது. கிராம மக்களுக்கு ஊருக்கு அருகில் சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த பகுதியில் உள்ள நிலம் கடந்த 2005-ம் ஆண்டு சேரன்மாதேவி ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த 36 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதாக தெரிகிறது.

பட்டா வழங்கி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த இடத்தை அளந்து தரவில்லை என்று பட்டியல் இன மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த நிலத்தை பட்டியல் இன மக்களுக்கு அளந்து கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

குடியேறும் போராட்டம்

இதனை அறிந்த தெற்கு மயிலப்புரம் மக்கள், தங்களுக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தி இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி உள்ளதாக கூறி நேற்று சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் சமரசம் பேசினர். தாசில்தார் வெளியூர் சென்று இருப்பதாகவும், அவர் வந்த பிறகு பேசி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினர். அதுவரை நிலத்தை அளந்து கொடுக்கப்போவதில்லை என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com