

பிரபல மலையாள நடிகர் பாபு நம்பூதிரி. இவர் கடந்த 40 வருடங்களாக வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் 215-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மம்முட்டியுடன் நிறக்கூத்து, மோகன்லாலுடன் தூவானத்தும்பிகள் உள்ளிட்ட பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பாபு நம்பூதிரியை கேரள மாநிலம் கோட்டயம் குருவிலங்காடு பகுதியில் உள்ள மன்னைக்காடு கணபதி கோவிலில் பக்தர்கள் பூசாரியாக பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த கோவில் 300 வருடம் பழமையானது ஆகும். பாபு நம்பூதிரியின் குடும்ப கோவிலும் இதுதான்.
பூசாரியானது குறித்து பாபு நம்பூதிரி கூறும்போது, நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கோவிலில் பூஜைகள் செய்யும் நடைமுறைகளை தெரிந்து கொண்டேன். கோவிலுக்கு தலைமை பூசாரி வராத நாட்களில் நானே பூசாரியாக மாறி பூஜைகள் செய்கிறேன். பூசாரியாக இருப்பதை எனது கர்மாவாக கருதுகிறேன் என்றார்.