

நாகூர்:
நாகூர் தர்கா நிர்வாகத்தை வக்பு வாரியம் ஏற்றது. இடைக்கால நிர்வாகிகள் பயன்படுத்திய அறை, பெட்டகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
நாகூர் தர்கா
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக உள்ள இந்த தர்காவை 8 பேர் கொண்ட பரம்பரை போர்டு ஆப் டிரஸ்டிகள் நிர்வாகம் செய்து வந்தனர். டிரஸ்டிகளில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து தர்காவை நிர்வாகம் செய்வதில் போட்டி மற்றும் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்பட்டன.
இதை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு தர்காவை நிர்வாகம் செய்ய இடைக்கால நிர்வாகிகளை சென்னை ஐகோர்ட்டு நியமித்தது. இந்த இடைக்கால நிர்வாகிகள் 4 மாதம் மட்டுமே தர்கா நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்குள் அறங்காவலர்கள் இடையே நிலவி வரும் கருத்து முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இடைக்கால நிர்வாகிகள்
இதையடுத்து இடைக்கால நிர்வாகிகளாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் நியமிக்கப்பட்டு நாகூர் தர்கா நிர்வாகத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகூர் தர்காவின் 465-ம் ஆண்டு கந்தூரி விழாவில் ஒருவரை அனுமதிப்பது தொடர்பாக வக்பு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தர்காவின் தற்காலிக நிர்வாக கமிட்டி மேல்முறையீடு செய்தது.
இந்த மேல் முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள், தர்காவின் தற்காலிக நிர்வாக கமிட்டி தேவையற்ற முறையில் தர்கா நிதியை பயன்படுத்தி மேல்முறையீடு வழக்கு தொடுத்ததற்கு கண்டனம் தெரிவித்தது.
நிர்வாகத்தை வக்பு வாரியம் ஏற்பு
மேலும் 4 மாதங்கள் மட்டுமே தர்காவை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக கமிட்டி 4 ஆண்டுகளாக நிர்வகிப்பது எப்படி? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் இடைக்கால நிர்வாக கமிட்டி இனிமேல் நாகூர் தர்கா நிர்வாகத்தை நிர்வகிக்க கூடாது என்றும், தர்காவின் நிர்வாக பொறுப்பை வக்பு வாரியம் ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவுப்படி தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் பரீதாபானு நேற்று முன்தினம் நாகூர் தர்காவுக்கு வந்தார். பின்னர் தர்காவின் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர், பதிவேடுகள் அறை மற்றும் லாக்கர் உள்ள இடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
அறைக்கு சீல் வைப்பு
வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் பரீதாபானு நாகூர் தர்காவின் நிர்வாக பொறுப்பை ஏற்ற அறிவிப்பை தர்கா அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. இதை தொடர்ந்து இடைக்கால நிர்வாகிகள் பயன்படுத்திய அறை, பாதுகாப்பு பெட்டகம், கோப்புகள் வைத்துள்ள அறை ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர்.
கோர்ட்டு உத்தரவுப்படி இடைக்கால நிர்வாகிகள் அலுவல் பணிகள் மேற்கொள்ள தடை விதித்ததுடன் நாகூர் தர்கா நிர்வாகத்தை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் கொண்டு வர வக்பு வாரிய ஆய்வாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நகல்களும் அலுவலகத்தில் ஒட்டப்பட்டது.