தோட்டத்தில் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

தேனி அருகே விவசாய தோட்டத்தில் வாலிபர் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோட்டத்தில் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
Published on

தேனி,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த சீனிமுத்து மகன் முத்துக்குமார் (வயது 27). இவர், அருகில் உள்ள கோணாம்பட்டி பகுதியில் விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவர் தோட்டத்துக்கு வேலைக்கு சென்றால் அங்கேயே சில நாட்கள் தங்கி இருப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.

கடந்த 15-ந்தேதி தோட்டத்துக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று சீனிமுத்து தனது மகனை பார்ப்பதற்காக தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் முத்துக்குமார் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் தேனி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜ்குமார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். பிணமாக கிடந்த முத்துக்குமார் கழுத்தில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது.

பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் சீனிமுத்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், முத்துக்குமார் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும். அவருடைய தந்தை சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளதால், அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com