சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டம் - 2,018 பேர் கைது

சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர். அதில் 1,100 பெண்கள் உள்பட 2 ஆயிரத்து 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டம் - 2,018 பேர் கைது
Published on

சிவகங்கை,

சிவகங்கையில் மாவட்ட அளவில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துபாண்டியன், நாகேந்திரன், முத்துராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோஅமைப்பின் சார்பில் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 21 மாத ஊதியக்குழு நிலுவை தொகை வழங்க வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி பணிகளுக்கு ஆசிரியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும். தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

இளைஞர்களின் வேலை வாய்ப்பை தட்டி பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் கடந்த 22-ந்தேதி முதல் கால வரையரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, உயர்கல்வி துறை, நகர் நிர்வாக துறை, அங்கன்வாடி, சத்துணவு, தலைமை செயலகம் உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஈடுபட்ட மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் முத்துச்சாமி, செல்வகுமார், ரவிச்சந்திரன், ஜோசப்சேவியர், சங்கர், இளங்கோ, செல்வம் மற்றும் 1,100 பெண்கள் உள்பட 2 ஆயிரத்து 18 பேர்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com