பெண்ணிடம் 6½ பவுன் நகை திருட்டு
காரைக்கால்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பெண்ணிடம் 6 பவுன் நகை திருடப்பட்டது. இந்த சம்பவத்தால் சனி விலகி விட்டதாக கூறி போலீசில் புகார் தராமல் சென்றது வினோதமாக உள்ளது.
சாமி தரிசனம்
மதுரை அரும்பனூர் அழகர் கோவில் மெயின்ரோட்டை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் நெல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஜோதிடர் தெரிவித்த ஆலோசனையின்படி தனது மனைவி உமாதேவியுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சனீஸ்வரரை தரிசனம் செய்ய திருநள்ளாறு வந்தார். சன்னதி எதிரே நின்று தம்பதியினர் சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போது உமாதேவி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உமாதேவி திருநள்ளாறு போலீசில் புகார் கொடுக்கலாம் என்று கணவரிடம் கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர், உயிருக்கு வந்த ஆபத்து தங்க நகையுடன் போய்விட்டது, சனி விலகிவிட்டதாக கருதி புகார் தராமல் வீட்டுக்கு போகுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
போலீசா விசாரணை
இதை நம்பி அந்த தம்பதியர் புகார் கொடுக்காமல் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்தநிலையில் யாரோ சொன்னதை கேட்டு போலீசில் புகார் தெரிவிக்காதது தவறாக போய் விட்டது. போலீசில் தெரிவித்து இருந்தால் நகையை மீட்டு கொடுத்து இருப்பார்கள் என்று உமாதேவி கணவரிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று திருநள்ளாறு வந்த கருப்பசாமி கடந்த டிசம்பர் மாதம் சனீஸ்வரர் சன்னதி முன்பு நடந்த திருட்டு குறித்து புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
--------

