தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து பொதுமக்களும் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்
Published on

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில், கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் மது குடிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவமாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள், வினாடிவினா போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவமாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறையின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.19 ஆயிரத்து 895 மதிப்பில் வங்கி கடன் வட்டி மானியம், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் பார்வையிழந்தோர் நிதி உதவி ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்தனர். சிலர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து 4 முற்றுகை போராட்டங்கள் நடந்ததால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் இளையராஜா தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் சுமார் 50 பேர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மதுரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்திற்குள் வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், தேனி அருகே ஊஞ்சாம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட புறம்போக்கு நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சிக்கின்றனர். அந்த இடத்தை அளவீடு செய்து வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டாவாக கொடுக்க வேண்டும் என்று கூறினர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் தங்களின் கோரிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 80 பேர், தங்கள் ஊரில் மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முற்றுகையிட்ட மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் சாதி, மத பிரச்சினைகள் இன்றி மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். தற்போது புதிதாக மதுபான கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பிற பகுதிகளில் இருந்தும் மதுகுடிக்க வந்து செல்வார்கள். மது குடிப்பவர்களால் சாதி, மத மோதல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவமாணவிகளுக்கும், பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே மதுபான கடை அமைக்கும் பணியை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று கூறினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதேபோல், போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி ரெங்கநாதபுரத்தை சேர்ந்த மக்களும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கூறுகையில், ரெங்கநாதபுரத்தில் உள்ள தேவர் காலனியில் புதிதாக 2 டாஸ்மாக் கடைகள் அமைக்க முயற்சி நடக்கிறது. இங்கு மதுபான கடைகள் அமைத்தால் பெண்கள், குழந்தைகள், மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும். மக்கள் பயன்படுத்தும் பாதையில் இந்த டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட உள்ளது. எனவே இங்கு மதுபான கடைகள் அமைக்கக்கூடாது என்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ்ப்புலிகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சின்னமனூர் மேலப்பூலானந்தபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலப்பூலானந்தபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான மாரிச்சாமி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் பலியானார். அவர் சாவுக்கு காரணமான சரக்கு வேன் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாரிச்சாமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து மாரிச்சாமியின் மனைவி முத்தழகு தனது 2 குழந்தைகளுடன் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com