நடிகர் உபேந்திராவின் கட்சியுடன் கூட்டணி இல்லை குமாரசாமி பேட்டி

நடிகர் உபேந்திராவின் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று குமாரசாமி கூறினார்.
நடிகர் உபேந்திராவின் கட்சியுடன் கூட்டணி இல்லை குமாரசாமி பேட்டி
Published on

பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இன்று(அதாவது, நேற்று) 5 தொகுதிகளின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். டிக்கெட்டை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவது குறித்து விவரங்களை கேட்டு அறிந்தேன். தொகுதிகள் வாரியாக இந்த பணியை தொடங்கியுள்ளேன். கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இந்த மாதத்தில் வெளியிடப்படும்.

வருகிற 10ந் தேதி துமகூருவிலும், 13ந் தேதி பெங்களூருவிலும் எங்கள் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தேர்தலில் போட்டியிட அதிகம் பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் மோசமான ஆட்சி நிர்வாகத்தை நடத்தி இருக்கின்றன.

இதுபற்றி மக்களிடம் எடுத்து சொல்லும் பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அரசு செலவில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் என்ற பெயரில் பிரசாரம் செய்ய சித்தராமையா முடிவு செய்துள்ளார். பிரசாரத்திற்காக அரசு பணத்தை விரயமாக்குவது சரியல்ல. எங்கள் கட்சியில் பிரஜ்வல் ரேவண்ணா உள்பட ஏராளமானவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

224 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும். யாருடனும் கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை. சிறிய கட்சிகள் வந்தால் அவர்களுக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். நடிகர் உபேந்திரா கட்சியின் கொள்கை வேறு மாதிரியாக உள்ளது. அதனால் அவரது கட்சியுடனும் கூட்டணி இல்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com