

நொய்யல்,
மகா மாரியம்மன் கோவில்
புன்னம்சத்திரம் அருகே பிரசித்தி பெற்ற புன்னம் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 13-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 17-ந் தேதி வடிசோறு பூஜை நடைபெற்றது.
இதையடுத்து, நேற்று முன்தினம் புன்னம்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தேரோட்டம்
நேற்று காலை மகா மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். அதன்பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். பின்னர் தேர் நிலையை அடைந்தது.
மாவிளக்கு பூஜை
அதனைத்தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மன் முன் படையலிட்டனர். மேலும், மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில், 18 பட்டி கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.