உறவுகளை நிராகரிக்கும் முன்பு கொஞ்சம் யோசியுங்க!

நிராகரிக்க நினைக்கும் உறவு, உங்களுக்கு மிகவும் பிடித்த உறவாக இருக்கும் பட்சத்தில், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்.
உறவுகளை நிராகரிக்கும் முன்பு கொஞ்சம் யோசியுங்க!
Published on

வ்வொருவருக்கும் தனித்தனியான கருத்துகள், விமர்சனங்கள், ஆசைகள் இருக்கும். இவற்றைப் பூர்த்தி செய்வதற்கான எதிர்பார்ப்பு, நமக்குப் பிடித்த உறவிடம்தான் ஏற்படும். இந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறும்போது, பலரும் பிடித்த உறவாக இருந்தாலும் எளிதில் நிராகரித்து விடுகின்றனர்.

தாங்கள் செய்தது தவறு என உணரும்போது, மீண்டும் பழைய உறவை புதுப்பிப்பதில் பலருக்கும் தயக்கம், தடுமாற்றம் ஏற்படும். அதை மீறி மீண்டும் இணைந்தாலும் அதில் பழைய அன்பைக் காண முடியாது. எனவே, எந்த உறவையும் நிராகரிப்பதற்கு முன் சில விஷயங்களை நினைவில் கொண்டு சிந்திக்க வேண்டும். அவற்றில் சில:

உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்:

கருத்துகளை வெளிப்படுத்துவதில் இருதரப்புக்கும் சம உரிமை உண்டு. ஒரு தரப்புக் கருத்தை மட்டும் எப்போதும் வெளிப்படுத்தி நியாயப்படுத்தாமல், எதிர்தரப்பு உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும் முக்கியம். ஒருவருடைய உணர்வுகளை வெளிப்படையாகக் கூறுவதற்கும், தன்னைத் தானே வெளிப்படையாக நிலை நிறுத்துவதற்கும் அதிக தைரியம் தேவை. அதை ஏற்க மறுத்தாலும், எதிர் தரப்பின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதும் முக்கியம். மேலும், எதிராளியிடம், கனிவாகவும் பரிவுடனும் இருப்பதுடன், அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பதும் அவசியம்.

நேர்மையாக செயல்படுங்கள்:

நிராகரிக்க நினைக்கும் உறவு, உங்களுக்கு மிகவும் பிடித்த உறவாக இருக்கும் பட்சத்தில், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். சங்கடமான உரையாடலில் இருந்து தப்பிப்பதற்காக, எதிராளியை தவிர்க்கவோ அல்லது புறக்கணிக்கவோ கூடாது. உங்கள் தரப்பின் உண்மையை அறிவதற்கு அவர்களுக்கு முழுத்தகுதியும் உள்ளது. எதிராளியின் கேள்விக்கு உங்கள் பதில் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். இதனால், இருவருக்குமிடையே இருக்கும் மனக்குழப்பம் தெளிவாகும்.

தவறான நம்பிக்கை கொடுக்காதீர்கள்:

மனக்குழப்பத்தை தீர்க்க முயலும்போது, வார்த்தையில் கட்டாயம் கவனம் வேண்டும். வார்த்தைகளில், இனிப்பு தடவி பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு விஷயத்தில் திட்டவட்டமாக உறுதியளிக்க முடியாவிட்டால், நம்பிக்கை அளிக்காதீர்கள். இல்லை என்று மறுத்தாலும், எதிராளியின் மனது புண்படாமல் மென்மையாகக் கூறுவதற்கு முயல வேண்டும்.

முடிவில் நம்பிக்கையுடன் இருங்கள்:

எதிலும், முடிவு எடுப்பதற்கு முன்பு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்கள் முடிவு என்று நிர்ணயித்த பின்பு, அதில் கட்டாயம் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருங்கள். முடிவு எடுத்த பின்பு, மனதை மாற்றவோ, முடிவை மாற்றி அறிவிக்கவோ முயலாதீர்கள். இந்த மாற்றம், மற்ற நபரையும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கச் செய்யும்.

இணையும் முன் யோசியுங்கள்:

ஒரு விஷயத்தில், முடிவெடுக்கும் முன்பு எதிராளியின் உணர்வுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். நிராகரிப்பதற்கு முன்னர் யோசிப்பது போன்று, உறவில் கசப்பு ஏற்பட்டு மீண்டும் இணையும்போது, அதில் சில எல்லையை வகுத்துக் கொள்வதும் முக்கியமானது. இதை எப்போதும் நினைவில் நிறுத்திக்கொண்டால், எதிர்காலத்தில் இத்தகைய சூழல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com