திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தா.பழூர் திரவுபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
Published on

தா.பழூர்

தீமிதி திருவிழா

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தா.பழூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடந்த மாதம் 31-ந் தேதி அன்று காப்பு கட்டி தீமிதி திருவிழா தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மண்டகபடி தாரர்களால் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, திரவுபதி அம்மன், தருமர், பீமன், அர்ஜுனர், நகுலன், சகாதேவன், கிருஷ்ணர், அரவான் ஆகிய தெய்வங்கள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா நடைபெற்றது. தினமும் இரவு மகாபாரத கதை பக்தர்களுக்கு சொல்லப்பட்டது. அதில் அரக்கு மாளிகை, அர்ஜுனன் தபசு, மாடு திருப்புதல், அரவான் களப்பலி, சக்கரவாகம்கோட்டை ஆகியவை பக்தர்களுக்கு தத்ரூபமாக நடித்துக் காண்பிக்கப்பட்டது.

நேர்த்திக்கடன்

இறுதி நாளான நேற்று காலை சுவாமிகள் வீதிஉலா முடிந்தவுடன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு பூங்கரகம், அக்னி கரகம் எடுத்து தனித்தனியாக வீதி உலா நடைபெற்றது. அக்னி கரகம் வீதிஉலா சென்றபோது கோவிலில் திரளான பக்தர்கள் குவிய தொடங்கினர். அக்னி குண்டத்தில் அக்னி கரகம் எடுத்து வந்த பக்தர் முதலில் இறங்கி நடந்து வந்தார். அவரை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி யின் நிறைவாக அக்னி குண்டத்திற்கு தீபாராதனை செய்யப்பட்டு பின்னர் திரவுபதி அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. தீமிதி திருவிழா நடைபெற்ற போது கூடியிருந்த மக்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து வரும்10-ந் தேதி அகோரவீரபத்திரர் பூஜையும், 15-ந் தேதி விடையாற்றி வைபவமும் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com