திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோலாகலம்

வெட்டி வேரால் உருவாக்கப்பட்ட மாலை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான், தெய்வானை தேரில் எழுந்தருளினர்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோலாகலம்
Published on

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி ஆட்டு கிடா வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமணமான பெண்கள் புதிய திருமாங்கல்ய கயிறு மாற்றிக்கொண்டனர்.

இதையடுத்து இரவு மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (19-3-2025) பெரிய தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 4 மணிக்கு உற்சவர் சன்னதியில் முருகன், தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

அதன்பின்னர், வெட்டி வேரால் உருவாக்கப்பட்ட மாலை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காலை 6.40 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை தேரில் எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் குன்றத்து முருகனுக்கு அரோகரா என்ற பக்தி பெருக்குடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவலப்பாதை வழியாக வயல்வெளிகளை ஒட்டிய பகுதியில் ஆடி அசைந்து சென்று பக்தர்களை பரவசப்படுத்தியது. தேரின் முன்பாக சிறிய தேரில் விநாயகர் சென்றார்.

விழாவில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், நிலையூர், தனக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com