ஒரே நாளில் 55 திருமணங்கள், 30 காதுகுத்து நிகழ்ச்சிகள்... திருப்போரூர் முருகன் கோவிலில் குவிந்த மக்கள்

ஏராளாமன சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன், மாட வீதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published on

திருப்போரூரில் புகழ்பெற்ற அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் உள்ளது. அறுபடை வீடுகளுக்கு இணையான இக்கோவிலில் விடுமுறை மற்றும் விசேஷ தினங்கள், செவ்வாய்க்கிழமைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். முகூர்த்த நாட்களில் இக்கோவிலில் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும்.

அவ்வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் கோவில் வளாகத்தில் 55 திருமணங்களும், 30 காதுகுத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த உறவினர்கள், நண்பர்களால் கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தை பக்தர்களால் சுற்றிவர முடியவில்லை.

இது ஒருபுறம் இருக்க கோவிலை ஒட்டியுள்ள 4 மாடவீதியைச் சுற்றி உள்ள  15-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களிலும் திருமணங்கள் நடைபெற்றன. கோவிலில் நடைபெற்ற திருமணங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நடைபெற்ற திருமணங்களுக்கு வந்தவர்கள் தங்களது இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தியதால் நான்கு மாட வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாட வீதியில் நடந்து செல்வோர், மாட வீதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். திருப்போரூர் ரவுண்டானா முதல் கண்ணகப்பட்டு வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com