திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம்

உற்சவர் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளி வலம் வந்தனர்.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம்
Published on

பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 8-ந்தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற ஏப்ரல் 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கு கொடியேற்றம் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று முன்தினம் இரவு தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதிகாலை 5.30 மணியளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.

முதலில் விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேர்கள், தேரோடும் வீதிகளில் பவனி வந்து நிலையை அடைந்தது. பின்னர் காலை 7.20 மணியளவில் ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்த தேர் காலை 9.15 மணிக்கு மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்தது. பின்னர் காலை 9.30 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

அந்த தேரின் ஹைட்ராலிக் பிரேக் சரியாக இயங்காததால் தேர் மெதுவாக வந்தது. வடக்கு உள்வீதியை கடக்க மதியம் 2.30 மணியானது. பின்னர் வெயிலின் காரணமாகவும், பக்தர்கள் உணவு சாப்பிடுவதற்காகவும் சிறிது நேரம் இடைவெளி விடப்பட்டது. இதையடுத்து மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் மாலை 4.45 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டு மாலை 5 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் அம்மன் தேர் மாலை 5 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டு மாலை 6.10 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com