

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு மன்றம் நேற்று தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு மன்றம் நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மதியம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்தது. மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி, நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு மன்ற தலைவர் நாராயணசாமி வரவேற்று பேசினார். மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், வக்கீல் சங்க குழு தலைவர் திலக் ஆகியோர் பேசினார்.
விழாவில் மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் தமிழ்வாணன் பேசியதாவது:
கோர்ட்டின் பணி முக்கியமான பணி ஆகும். இந்த குறைதீர்வு மன்றத்தின் பணி மிகவும் முக்கியமானது. 1962ம் ஆண்டு மார்ச் 15ந் தேதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த நாள் உலக நுகர்வோர் தினமாகவும், 1986ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ந் தேதி தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த நாள் தேசிய நுகர்வோர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் நுகர்வோர் என்பதால் நுகர்வோர் சட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மாவட்ட அளவிலான நுகர்வோர் குறைதீர்வு மன்றத்தில் ரூ.20 லட்சம் வரை இழப்பீடு கோரும் வழக்குகளும், மாநில குறைதீர்வு ஆணையத்தில் ரூ.20 லட்சத்துக்கு மேல் ரூ.1 கோடி வரை இழப்பீடு கோரும் வழக்குகளும், அதற்கு மேல் இழப்பீடு கோருபவர்கள் தேசிய நுகர்வோர் ஆணையத்திலும் வழக்கு தாக்கல் செய்யலாம். இந்த கோர்ட்டில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கோர்ட்டில் சம்பந்தப்பட்டவர்தான் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது இல்லை. பொது நல வழக்கு போன்று மக்கள் உரிமையை காக்க ஆர்வம் உள்ளவர்களும் வழக்கு தொடரலாம். இந்த கோர்ட்டில் 90 நாட்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். சட்டம் மக்களுக்கு எளிதாக இருக்க வேண்டும்.
வக்கீலுக்கும், நீதிபதிக்கும் சாதி, மதவெறி இருக்க கூடாது. கடவுள் நம்பிக்கை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். பெரியாரின் சமூக சீர்த்திருத்தத்தை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். வக்கீல்களுக்கு சமூக சீர்த்திருத்த கருத்து இருக்க வேண்டும். இந்த நுகர்வோர் குறைதீர்வு மன்றம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நீதிபதிகள் சுபத்ரா, கவுதமன், காமராஜ், ரோஸ்கலா, அண்ணாமலை, கதிரவன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு மன்றம் உறுப்பினர் சங்கர் நன்றி கூறினார்.