தூத்துக்குடி: சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 151 பேருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட காவல் வாகனங்களை ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி: சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 151 பேருக்கு எஸ்.பி. பாராட்டு
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஆகியவை குறித்து ஆய்வு நடைபெற்றது.

மேலும் மாவட்ட எஸ்.பி. அலுவலக மைதானத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் ஆகியவை நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என மாவட்ட எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை குற்றங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் தடுத்தும், கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது போன்ற பல்வேறு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 151 காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட காவல்துறை ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், அரசு வழக்குரைஞர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com