

கல்வி, பிடித்த வேலை, தனக்கான லட்சியத்தை அடைவது, பிடித்த வாழ்க்கைத்துணைக்காக காத்திருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இன்றைய இளைஞர்களும், இளம்பெண்களும் திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள். 'பருவத்தே பயிர் செய்' என்று முன்னோர் கூறி வைத்த பழமொழி, திருமணத்துக்கும் பொருந்தும். ஆனால் காலமாற்றத்தால் 20 வயதுகளில் செய்யவேண்டிய திருமணத்தை, இப்போது பலரும் 30 வயதுகளில் செய்து கொள்கிறார்கள். இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
குழந்தைக்கான யோசனை: 20-களில் திருமணம் செய்யும்போது, குழந்தை பற்றிய எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்காது. இளம் வயது என்பதால் தாம்பத்திய வாழ்வின் இன்பங்களை முழுவதுமாக அனுபவிக்க முடியும். 20 வயதுகளில் திருமணம் ஆகும்போது குழந்தை பிறப்பு எளிதாகும். சுக பிரசவம் என்பதும் சாத்தியமாகும்.
ஆனால், 30-களில் திருமணம் செய்து கொள்ளும்போது, குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து முன் கூட்டியே திட்டமிடுவது அவசியமானது. 30 வயதுகளில் ஆண்-பெண் இருவருக்கும் உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, பெண்கள் கருத்தரிப்பது முதல் பிரசவம் வரை பல சவால்களை எதிர்கொள்ளக்கூடும். 30 வயதுக்கு மேல் கருத்தரிக்கும்போது 'சுக பிரசவம்' என்பது சிலருக்கு சாத்தியம் இல்லாமல் போகலாம். எனவே, சிசேரியன் சார்ந்த விஷயங்கள், அதற்கு பின்னர் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் என அனைத்தையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
அனுசரித்து செல்வது: 20-களில் திருமணம் செய்யும் பலருக்கு திருமண வாழ்க்கைக்கான மன முதிர்ச்சியும், பக்குவமும் இருக்காது. இதனால், கணவன்-மனைவி இடையே சில நேரங்களில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். அத்தகைய சமயங்களில் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறும் அறிவுரையை ஏற்றுக்கொண்டு அனுசரித்து செல்வார்கள்.
ஆனால், காலதாமதமாக திருமணம் செய்யும் பலரும், நீண்ட காலம் தனிமை மற்றும் சுயசார்புடனேயே வாழ்ந்திருப்பார்கள். இவர்கள் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கைத்துணையின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வது சற்றே கடினமானது. நீண்ட காலமாக தனிப்பட்ட தேவைகளை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்பட்டு வந்ததால் மற்றவருடன் அனுசரித்து செல்வதற்கு சிரமப்படுவார்கள். 30 வயதிற்குப் பின்பு திருமணம் செய்யும்போது, தனிப்பட்ட சுதந்திரம் குறித்து முன்னரே பேசி இருவரும் தெளிவான முடிவுகளை எடுப்பது முக்கியமானது. இல்லாவிடில் திருமண பந்தத்தில் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.
நிதி சார்ந்த விஷயம்: திருமண பந்தத்தில், நிதி எப்போதும் முக்கியமான ஒன்று. இளமையில் திருமணம் செய்யும்போது நிதி சார்ந்த விஷயங்களை எளிதாக திட்டமிட்டு அதற்கேற்ப இலக்கை நிர்ணயிக்க முடியும். ஆனால் 30-களில் திருமணம் செய்யும்போது, அடுத்தடுத்து பல பொறுப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். இதனால் நிதி சார்ந்த விஷயங்களைப் பற்றி சரியாக திட்டமிட முடியாமல் திணறுவதற்கான வாய்ப்பு உண்டு. தாமதமாக திருமணம் செய்துகொள்பவர்கள், முதலில் இருவரின் நிதி இலக்கு, குடும்ப தேவைகளுக்கான எதிர்கால திட்டங்கள், அதை சார்ந்த விஷயங்களைப் பூர்த்தி செய்வதற்கான யுக்திகள் போன்றவற்றை முன்னரே திட்டமிட வேண்டும்.