நெல்லையில் வங்கி ஊழியரிடம் ரூ.3 கோடி மோசடி; ஒருவர் கைது 4 பேருக்கு வலைவீச்சு

நெல்லையில் வங்கி ஊழியரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லையில் வங்கி ஊழியரிடம் ரூ.3 கோடி மோசடி; ஒருவர் கைது 4 பேருக்கு வலைவீச்சு
Published on

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 30). இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் சட்ட ஆலோசகராக வேலை செய்து வந்தார். அப்போது நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும், செல்வகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

தங்கராஜ் நெய் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணம் முதலீடு செய்யுங்கள் என செல்வகுமாரிடம் கூறினார். இதை நம்பி பல தவணைகளில் ரூ.3 கோடி வரை செல்வகுமார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

தங்கராஜூடன் கூட்டு சேர்ந்து மணிகண்டன், சாமிநாதன், பழனியம்மாள், அபிராமி ஆகியோர் போலியாக ஜி.எஸ்.டி. தயார் செய்து நெய் வியாபாரம் செய்ததாக தெரிகிறது. இதில் செல்வகுமாருக்கு பணம் கொடுக்காமல் அவர்கள் 5 பேரும் சேர்ந்து ரூ.3 கோடி வரை மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து செல்வகுமார் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரிடம் புகார் மனு கொடுத்தார். அதன் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தங்கராஜ் உள்பட 5 பேரும் சேர்ந்து செல்வகுமாரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தங்கராஜை போலீசார் கைது செய்தனர். மணிகண்டன், சாமிநாதன், பழனியம்மாள், அபிராமி ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com