

கரூர்,
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கரூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர், முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளர் எம்.ஆர்.விஜய பாஸ்கரை ஆதரித்து கரூரில் வெங்கமேடு, ராயனூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மாபெரும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
கரூரில் கூடிய மக்கள் வெள்ளத்தின் மூலம் கரூர் மண்ணில் மாற்றத்திற்கான பெரும் காற்று வீசுவதை உணர முடிந்தது. திமுகவின் குடும்ப அரசியல், நிர்வாகத் தோல்வி மற்றும் ஊழல் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டெடுக்க மக்கள் தயாராகிவிட்டனர். கரூரின் வளர்ச்சியை முடக்கியவர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்.
ஊழல் முறைகேட்டில் ஊறிப்போன செந்தில் பாலாஜி கரூரில் தான் தோற்கப்போவது உறுதி என்பதை அறிந்து கோவைக்கு ஓடிவிட்டார். அங்கும் அவரது தோல்வி உறுதி. தமிழகமெங்கும் தாய்மார்கள் திமுகவின் மீது கொண்டுள்ள கோபத்தை தங்களின் வாக்குகள் மூலம் வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். டாஸ்மாக் மூலம் கரூர் கம்பெனி அடித்த கொள்ளையால் இந்த மாவட்டத்திற்கே அவமானம். அதனை சரிசெய்து கரூரின் பெருமையை நாம் மீட்டெடுக்க வேண்டும். திமுகவின் அராஜக அரசியலை வேரறுப்போம்.
கரூரில் பிரசாரத்திற்கு சென்ற தாய்மார்கள் மீது திமுகவை சேர்ந்த ரவுடிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதை வன்மையாக கண்டிக்கிறேன். அதில் தெரிவது அவர்களின் கோழைத்தனமும், தோல்வி பயமும் தான். இவர்களின் அயோக்கிய தனத்திற்கும், அராஜகத்திற்கும் முடிவு கட்டவேண்டியது காலத்தின் கட்டாயம்.
அதற்கு, வரும் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும், சட்டமன்றத் தேர்தலில் கரூர் மக்களின் பேராதரவுடன் நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேல் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறப்போவது உறுதி. நேர்மையான மற்றும் வலிமையான ஆட்சி அமைய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்போம்! தமிழகத்தை மீண்டும் தலைநிமிர செய்வோம்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்