சட்டசபை தேர்தல் பிரசாரம்.. இதுவரை 262 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

பல கட்சிகள் தங்கள் தரப்பு நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து வருகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலின்போது ஒவ்வொரு கட்சியும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளது. அந்தந்த கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் யார் யார்? என்பதை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்கும்படி தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏனென்றால், அறிவிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளருக்கான போக்குவரத்து உள்ளிட்ட தேர்தல் பிரசார செலவுகள், அவர் எந்த வேட்பாளருக்காக பிரசாரம் செய்கிறாரோ, அவரது தேர்தல் செலவுக்கணக்கில் சேராது.

அந்த வகையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 நட்சத்திர பேச்சாளர்களின் பெயரையும், அங்கீகரிக்கப்பட்டாத கட்சிகள் 20 நட்சத்திர பேச்சாளர்களின் பெயரையும் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துவிட வேண்டும். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் உள்பட 40 பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களின் பெயரை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் உள்பட 16 நட்சத்திர பேச்சாளர்களின் பெயர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, வீரபாண்டியன், முத்தரசன் உள்பட 40 பெயர்கள், அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வி.கே.சசிகலா உள்ளிட்ட 20 பெயர்கள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டன.

அவர்களின் பெயர்கள் உள்பட மற்ற கட்சிகளையும் சேர்த்து இதுவரை மொத்தம் 262 பேரை நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் பல கட்சிகளும் தங்கள் தரப்பு நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com