சட்டமன்ற தேர்தல்: கேரளாவில் நாளை பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, ரோடுஷோவில் பங்கேற்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்,

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, கேரளம் (140 தொகுதிகள்) மற்றும் அசாம் (126 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் (30 தொகுதிகள்) வரும் ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் மொத்தம் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள நாளை (புதன்கிழமை) கோழிக்கோட்டுக்கு வருகிறார்.

கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, ரோடுஷோவில் பங்கேற்கிறார். பின்னர் கோழிக்கோடு கடற்புரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியுடன் வருகிறார்.

ஏற்கனவே காங்கிரஸ் சார்பில், அரசு பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உள்பட 5 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்வில் கட்சியின் தேசிய மற்றும் மாநில அளவிலான தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com