

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. அரசு விடுமுறை நாட்கள் போக மீதியுள்ள 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்பட் டன. இந்த 4 நாட்களில் மொத்தம் 7 ஆயிரத்து 599 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 918 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 2.365 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 11 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின்போது, சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. பல்வேறு புகார்கள் முன் வைக்கப்பட்டதால் ஆதவ் அர்ஜுனா மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொது பார்வையாளர் முன்பு மனு மீண்டும் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் தேவராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “வேட்புமனுவில் மனைவியின் சொத்துக்களை குறிப்பிடாமல் ஆதவ் அர்ஜுனா மறைத்துள்ளார். வேட்புமனு பரிசீலினையின்போது தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் முறையாக பரிசீலிக்கவில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். புகாரை நிராகரித்து தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.